இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிகளின் வீரர்களை தேர்வு செய்வதில் தற்போது அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை தொடருக்கான தங்களது உத்தேச அணியை அறிவித்துள்ளது.
அதில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான மார்னஸ் லாபுஷேனுக்கு இடம் கிடைக்காத வேளையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் சங்காவிற்கு இடம் கிடைத்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தைக் ஈர்த்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக அவருக்கு ஐந்து முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாலில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரது பூர்வீகம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர்தான் என்று தெரிய வந்துள்ளது. 1990-களில் இந்தியாவில் பஞ்சாபில் வசித்து வந்த அவர்களது பெற்றோர் அதன் பிறகு தங்களது தொழிலுக்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
அவரது தந்தை ட்ரக் டிரைவராகவும், அவரது தாயார் அக்கவுண்ட்டாகவும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகின்றனர். சிட்னி தண்டர் அணிக்காக பிக்பேஷ் தொடரில் விளையாடி வரும் அவர் 2020-ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியிருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இப்போது 21 வயதை மட்டுமே நிரம்பிய இளம் வீரரான அவர் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் நான்காவது இந்திய வீரராக வரலாற்றில் தன் பெயரை பதிக்க காத்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக இந்திய பூர்வீகத்தைச் சார்ந்த குரீந்தர் சாந்து, ஸ்டூவர்ட் கிளார்க், பிரான்ஸ்பி கூப்பர் என மூவர் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய வேளையில் நான்காவது இந்திய வீரராக அவர் ஆஸ்திரேலியாக்காக விளையாட இருக்கிறார். பிக்பேஷ் தொடரில் அறிமுகமானபோது அவர் முதல் தொடரிலேயே 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 2020-ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.