இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி என்றால் அதில் ஆக்ரோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. அதேபோல சில நேரங்களில் போட்டியின் நடுவே வார்த்தை போர்களும் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பினால் அதற்காக ரசிகர்களை கூட இந்திய வீரர்கள் பக்கம் நிற்காமல் அவர்களைப் பற்றி சரமாரியாக திட்டி தீர்ப்பது உண்டு.
இப்படியான சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 10 வருடங்களாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடரை தவிர்த்து மற்ற எந்த ஒரு தொடரும் நடக்கவில்லை. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் போக்கு தான்.
இந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்துகிறது என்றதும் இந்திய அணி வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது. இதன் காரணமாக ஆசியக் கோப்பை ஹைபிரிட் மாடலில் அதாவது பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடக்க உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2012-13 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒரு போட்டியில் நடந்த மோதல் குறித்து அந்தப் போட்டியில் பங்கு பெற்ற கம்ரன் அக்மல் தற்போது பேசியுள்ளார் இது குறித்து அவர் கூறுகையில்,
அந்தப் போட்டியின் போது இஷாந்த் சர்மா என்னை ஒரு கெட்ட வார்த்தையால் திட்டினார். அதற்காக அவர் 20 மடங்கு திரும்ப பெற்றார். உண்மையைத்தான் நான் சொல்கிறேன். இந்த சண்டை முடிந்து அடுத்த நாள் நாங்கள் டி20 போட்டி விளையாடுவதற்காக அகமதாபாத் நோக்கி விமானத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது நான், விராட் கோலி, சோயப் மாலிக் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தோம்.
அச்சமயம் யாரோ ஒருவர் நேற்றைய போட்டியில் உனக்கும் இஷாந்த் சர்மாவுக்கும் இடையே சரியாக என்ன நடந்தது என்று கேட்டார்கள். அப்போது இஷான் சர்மா குறுக்கிட்டு, நான் பவுலிங் செய்துவிட்டு அவரைப் பார்த்து ஒரு கெட்ட வார்த்தையில் திட்டினேன் என்றார்.
அந்த நிகழ்வு சீரியஸாக மாறியது. ஆனால் தோனியும் ரெய்னாவும் அப்போது அதில் தலையிட்டார்கள். அவர்களுக்கு யார் மீது தவறு என்று தெரியும். அதனால் அவர்கள் அங்கு நிலைமையை சரி செய்தார்கள். இல்லை என்றால் நிலைமை மோசமாக ஆகி இருக்கும். நான் நிச்சயம் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் விளையாடவாவது தடை செய்யப்பட்டு இருப்பேன். ஆனால் ஐந்து போட்டிகளுக்கான கட்டணத்தில் எனக்கு பைன் விதிக்கப்பட்டது என்று கூறி முடித்தார் கம்ரன் அக்மல்