நேற்று நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பரபரப்பான கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசி ஜடேஜா கூஸ்பம்ப் தருணத்தைக் கொடுத்து அணியை வெற்றி வாகை சூட வைத்தார்.
இந்த போட்டியில் மழைக் காரணமாக 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓவருக்கு கிட்டத்தட்ட 12 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில் சென்னை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். ருத்துராஜ், கான்வே, ஷிவம் துபே, ரஹானே என அனைவரும் கணிசமாக ரன்களைக் குவித்தார்கள்.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி மட்டும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். மோஹித் ஷர்மா ஓவரில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
அதன் பின்னர் வந்த ஜடேஜாதான் வெற்றிக்கான இலக்கை அடைய உதவினார். இந்த சீசன் முழுவதும் தோனி களமிறங்க வேண்டுமென ஜடேஜா அவுட் ஆகவேண்டும் எனக் கத்தினர் சிஎஸ்கே ரசிகர்கள். ஆனால் கடைசியில் தோனி அவுட்டாகி அதன் பின்னர் வந்த ஜடேஜாவால்தான் இந்த முறை அந்த அணியே கோப்பையை வென்றுள்ளது என்பது நகைமுரணாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தோனி கண்கலங்கி, ஜடேஜாவை கட்டியணைத்து வெற்றியை கொண்டாடிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஜடேஜா வெற்றிக்கான பவுண்டரியை கடைசி பந்தில் அடிக்க, அணியே உற்சாகம் பீரிட தோனி மட்டும் கண்கலங்கியவாறு பெவிலியனில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
பின்னர் அணிவீரர்கள் ஜடேஜாவை கட்டியணைத்து கொண்டாடிய போது அங்கு வந்த தோனி, அவரை தூக்கி கண்கலங்கியவாறு தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். பொதுவாக தோனி தன்னுடைய உணர்ச்சிகளை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். சந்தோஷமோக இருந்தாலும் அதை சாதாரணமாகக் கடந்து செல்வார். ஆனால் இம்முறை அவரே கண்கலங்கி இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.