சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டி வெற்றியைத் தொடர்ந்து, சிஎஸ்கே தங்கள் அணியின் கொண்டாட்டத்தின் வீடியோவை அந்த அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர அது வைரல் ஆகியுள்ளது. ஸ்டேடியத்தில் இருந்து தங்களுடைய ஹோட்டலுக்கு மகிழ்ச்சியாக செல்லும் தருணங்களை வீடியோவாக எடுத்து சிஎஸ்கே சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
திங்களன்று ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை வென்ற பிறகு, கேப்டன் எம்எஸ் தோனியுடன் அணியின் சக வீரர்கள் இரவு முழுவதும் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கே ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை (ஜிடி) தோற்கடித்தது.
வெற்றி பெற்ற அணி திங்கள்கிழமை இரவு அகமதாபாத்தில் உள்ள ஹோட்டலுக்கு கொண்டாட்டத்தோடு ஆடிப்பாடி மகிழ்ச்சியாக சிஎஸ்கே வீரர்கள் சென்றனர். இது சம்மந்தமான வீடியோ ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஐந்து அடுக்குகளால் ஆன கேக் ஒன்றை வெட்டி அணியினருக்கு ஊட்டிவிட்டார்.
கேக்கின் ஒவ்வொரு அடுக்கும் CSK ஐபிஎல் இதுவரை ஐந்து முறை பட்டத்தை வென்ற ஆண்டுகளாக குறிக்கப்பட்டு இருந்தது. இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவிடம் ஐபிஎல் டிராபியை அணி ஹோட்டலுக்குள் கொண்டு செல்லும் மரியாதை வழங்கப்பட்டது, அணியில் உள்ள மற்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் ஹோட்டலுக்கு நுழைந்ததும் நடனமாடி ஐந்தாவது கோப்பை வெற்றியைக் கொண்டாடினர்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மற்றொரு வீடியோவில், சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது மனைவி ஜெயா பரத்வாஜுடன் அதிகாலை 5 மணிக்கு அணி ஹோட்டலின் லாபியில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
இணையத்தில் வைரலாகும் மற்றொரு வீடியோவில் அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தோனி கண்கலங்கி ஜடேஜாவை இடுப்பில் தூக்கி பாராட்டுகிறார். இப்படி நேற்று முழுவதும் சிஎஸ்கே அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் உணர்ச்சி பெருக்கான சம்பவங்களாக நடந்துள்ளன. இது சம்மந்தமான வீடியோக்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.