இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் எங்கு நடந்தாலும், ஒரே மஞ்சள் காடாக மைதானங்கள் நிரம்பி வழிகின்றன. இதற்கு முக்கியக் காரணம் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இதுதான் என ரசிகர்கள் நினைப்பதுதான். ஆனால் தோனி, போட்டிகளில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய சில பந்துகளே பேட் செய்கிறார் என்ற வருத்தமும் ரசிகர்களிடம் உள்ளது.
ஆனால் குறைவான பந்துகளே பிடித்தாலும், அதில் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி ரசிகர்கள திருப்தி படுத்துகிறார். கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளை சந்தித்த தோனி இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என அதிரடியாக 20 ரன்கள் விளாச சென்னை அணி இறுதி கட்டத்தில் நல்ல உத்வேகத்தைப் பெற்றது.
இந்த போட்டியின் போது தோனி தனது மூட்டு பகுதியில் ஏற்கனவே உள்ள காயம் காரணமாக விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதில் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அவர் சற்று நொண்டி நொண்டி ஓடியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தோனியின் அதிரடி ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் க்ரைம் ஸ்மித் தோனி, மீண்டும் தன்னுடைய சிறப்பான ஃபார்மை கண்டுகொள்ளுள்ளதாக கூறியுள்ளார்.
அதில் “ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்யச் செல்லும் போது அவருக்கு ஏற்படும் அழுத்தம் மிகப்பெரியது. ஒவ்வொரு முறை அவர் ஸ்டிரைக் செய்யும் போதும் கர்ஜனை, கூட்டம் என அலைமோதுகிறது. இது பார்ப்பதற்கு நம்பமுடியாதது, இந்த சீசனில் தோனி மீண்டும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் கலீல் அகமது அதுவரை நன்றாகவே பந்துவீசினார். ஆனால் தோனிக்கு ஆதரவாக, எழுந்த கோஷத்தைப் பார்த்து அழுத்தத்திற்கு உள்ளானார். தோனி சிக்ஸர் அடித்தவுடன், கலீலைப் பார்த்தால் அழுத்தத்திற்கு உள்ளானது தெரியும். 20 ரன்களை 9 பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் 220 க்கு மேல் அடித்தார். அவரும் ஜடேஜாவும் தந்த உத்வேகம் அந்த 160 என்ற இலக்கைக் கொடுத்தது” என பாராட்டியுள்ளார்.