தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு தங்கள் துறையை விட அதிக வருமானம் தருவது விளம்பரங்கள்தான். இந்தியாவைப் பொறுத்தவரை பல பிராண்ட்களுக்கு கிரிக்கெட் வீரர்களும் சினிமா துறையினரும் தூதுவர்களாக உள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் விளம்பரங்களில் அதிகமாக நடித்தவராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அதன் பிறகு இப்போது தோனி மற்றும் கோலி ஆகியோர் அதிக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். பிரபலங்கள் நடிப்பதால் மக்கள் மத்தியில் அந்த பிராண்ட்களுக்கு கூடுதல் நம்பகத்தன்மை கிடைக்கிறது.
இந்நிலையில் விளம்பரத் துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்பான ASCI, விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு எதிரான புகார்கள் கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பிரபலங்கள் பல ஒப்புதந்தங்கள் கையெழுத்திடும் முன் உரிய நம்பகத்த்னமை உள்ள எந்த ஆதாரத்தையும் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டு பெறுவதில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் கேமிங் தொழில் விளம்பரங்கள் விதிமீறல்களில் அதிகளவில் ஈடுபட்டுள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றும்போது, சம்மந்தப்பட்ட பிராண்ட் குறித்த நம்பகத்தன்மை ஆய்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டப்பூர்வமாகக் கோருகிறது. ஆனாலும் பிரபலங்கள் இடம்பெறும் விளம்பரங்களில் 97 சதவீத வழக்குகளில், அப்படி அவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அதில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிதான் என்ற அதிர்ச்சி தகவலையும் ASCI வெளியிட்டுள்ளது. எம்.எஸ். தோனி பத்து விளம்பரங்களில் இது போன்ற விதிமீறல்களைக் கணக்கில் கொள்ளாமல் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து பாலிவுட் நடிகரான நகைச்சுவை நடிகர் புவன் பாம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தோனியின் அதி தீவிர ரசிகர்களுக்கும் அதிர்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது.