சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வரமாட்டாரா என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தனர். ஏனென்றால் ருத்துராஜ் கெய்க்வாட்டும் கான்வேயும் விக்கெட்டே கொடுக்காமல் விளையாடி வந்தனர். பின்னர் இந்த ஜோடி பிரிந்த பிறகு களத்துக்கு வந்த ஷிவம் துபேவும் சிறப்பாக விளையாடி சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.
ஒரு கட்டத்தில் ஷிவம் துபே விக்கெட் விழ, இன்னும் இரண்டு ஓவர்கள் இருக்கும் நிலையில் களத்துக்கு வந்தார் தோனி. இந்த சீசன் முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் எப்படி ஆரவாரமாக வரவேற்பை அளித்து வருகிறார்களோ அதுபோலவே இந்த போட்டியிலும் காதைக் கிழிக்கும் சத்தத்தோடு ரசிகர்கள் தன்னை மறந்து கூச்சலிட்டு அவரை வரவேற்றனர்.
தோனி களத்துக்கு வந்து 19 ஆவது ஓவரில் ஒரு பந்தை மட்டும் சந்தித்து 1 ரன் எடுத்து எதிர்முனைக்கு சென்றார். அந்த ஓவர் முழுவதும் ஜடேஜா பயன்படுத்திக் கொண்டு ரன்களைக் குவித்தார். ரன்கள் வருவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லையே என ஒரு பக்கம் ஏமாற்றமும் இருந்தது.
பின்னர் 20 ஆவது ஓவரிலும் பந்தை எதிர்கொண்ட தோனி, சிங்கிள் மட்டுமே அடித்தார். பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்க, தோனி சிக்ஸ் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புல்டாஸ் பந்தில் அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பந்து ‘பிரண்ட் புட் நோ பால்’ என மூன்றாம் நடுவரால் அறிவிக்கப்பட்டது. அதனால் அடுத்த பந்து ப்ரீ ஹிட்டாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்: டெல்லிக்கு எதிரான போட்டியின் போது சூப்பரான சாதனையை படைத்த சி.எஸ்.கே.
இந்த பந்தில் எப்படியும் தோனி பவுண்டரி விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷாட் பாலாக வந்த அந்த பந்தை புல் ஷாட் அடிக்க, அது பேட்டில் சரியாக படாமல் மிட் விக்கெட் நோக்கி சென்றது. அந்த பந்திலும் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தோனி 4 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார். தோனியின் இந்த இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றமானதாக அமைந்தது. எனினும் சிஎஸ்கே-வின் வெற்றியை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்