கடந்த 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஐசிசி-யின் ஒரு நாள் உலககோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 2011-ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கபில் தேவுக்கு அடுத்து உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்திய தோனி அதன் பிறகு கேப்டன்சியில் உச்சத்தை தொட்டார்.
இப்படி இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்கு அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களும், அணித்தேர்வுமே காரணம் என்று பலரும் பாராட்டியிருந்தார்கள். ஏனெனில் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என இந்திய அணி அனுபவமும் துடிப்பும் கலந்த மிகச் சிறப்பான அணியாகவும் இருந்தது.
சரியான வீரர்களை சரியான இடத்திற்கு தேர்வு செய்து அவர்களிடம் இருந்த திறனை தோனி வெளிக்கொணர்ந்ததாலே இன்றளவும் அந்த அணி சிறந்த அணியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இடம்பெறாது அப்போதே பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்தது.
ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு பின்னர் அறிமுகமான விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அதிகளவில் பேசப்பட்டது. அதோடு ரோஹித் சர்மாவும் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது பெரிய ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவை பரிந்துரைத்ததே தோனி தான் என ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த ராஜா வெங்கட் என்பவர் பரபரப்பான கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலக கோப்பை அணியை நாங்கள் தேர்ந்தெடுக்க மீட்டிங்கில் அமர்ந்திருந்த போது முதல் 14 வீரர்களை நாங்கள் கூறியதும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் 15-வது வீரராக ரோஹித் சர்மாவை நாங்கள் பரிந்துரைத்த போது அப்போதைய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் ஒப்புக்கொண்டார். ஆனால் தோனி தான் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக பியூஷ் சாவ்லாவை தேர்வு செய்ய விரும்பினார். 14 வீரர்களை ஒப்புக்கொண்ட தோனி 15 வது வீரரை வேண்டாம் என்று கூறியதால் அவரின் கோரிக்கையின் படியே பியூஷ் சாவ்லாவை அணியில் இணைத்ததாக ராஜா வெங்கட் கூறியது குறிப்பிடத்தக்கது.