சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன் தினம் சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இது சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த போட்டியில் சென்னை அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்நிலையில் போட்டி முடிந்ததும் சிஎஸ்கேஅணி வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல மைதானம் முழுவதும் நடந்து வந்து பரிசுப் பொருட்களை கேலரிகளை நோக்கி வீசினர். அப்போது பல உணர்வுப் பூர்வமான தருணங்கள் நடந்தன.
இந்நிலையில் நன்றி கூறும் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் இணையதளத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது. நிகழ்ச்சி முடிந்து வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு நின்று பேசிக்கொண்டிருக்கும் போது தோனியின் அருகே, அவரின் மகள் ஸீவா நின்றார். அவர்களின் அருகே நின்ற அணியின் மூத்த ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆசையாக சென்று ஸீவாவை தூக்க முயன்றார்.
ஆனால் சில முறை முயன்றும் அவரால் ஸீவாவை தூக்க முடியாதது போல நடித்தார். இதைப் பார்த்த தோனி சிரித்து ஜடேஜாவின் செய்கையை ரசித்தார். ஸீவா நன்றாக வளர்ந்துவிட்டதாகவும், அதனால் தன்னால் அவரை தூக்க முடியவில்லை என்பதாகவும் ஜடேஜாவின் இந்த குழந்தைத் தன செயல் அமைந்தது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது.
இந்த நன்றி கூறும் நிகழ்ச்சிக்கு அவ்வளவு முக்கியமாகக் கவனிக்கப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அது, சென்னை அணியின் கேப்டன் 41 வயதாகும் தோனி, இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதுதான். இந்த ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த சீசனோடு ஓய்வை அறிவிப்பாரா இல்லையா என்பதுதான்.
இதற்காகவே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் சிஎஸ்கே போட்டிகள் எங்கு நடந்தாலும் தோனிக்காக மஞ்சள் ஆடை அணிந்து வந்து தங்கள் ஆதரவை சிஎஸ்கேவுக்கு தெரிவித்து வருகின்றனர். தோனிக்குப் பின் சென்னை அணியை யார் வழிநடத்துவார், அதற்குப் பின் இப்போது இருக்கும் ஆதரவு சென்னை அணிக்குக் கிடைக்குமா என்றெல்லாம் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளன.