ஐபிஎல் போட்டித் தொடரின் 16 ஆவது சீசன் தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோவிட் காரணமாக வெளிநாடுகளில் நடந்தது. இந்த பாதி போட்டிகளுக்கு மேல் நடந்து முடிந்துள்ள நிலையில் எந்தந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் 8 போட்டிகளுக்கு குறையாமல் விளையாடியுள்ளன.
இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு குறித்து தன்னுடைய கருத்தை நகைச்சுவையாக தெரிவித்தார்.
இந்த போட்டி லக்னோவில் நடந்தாலும் MS தோனிக்காக ஸ்டேடியம் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. தோனி டாஸ் வென்றபோது காது கேளாத சத்தம் எழுப்பியது. டாஸ் நிகழ்வை தொகுத்து செய்த டேனி மோரிசன், தோனியிடம் ”உங்களின் கடைசி ஐபிஎல் தொடரை விளையாடுவது எப்படி உள்ளது” எனக் கேட்க, அதற்கு சிரித்துக் கொண்டே தோனி “ஓ நீங்களாகவே முடிவு செய்து விட்டீர்கள் இதுதான் என்னுடைய கடைசி சீசன் என்று” எனக் கூற மைதானம் ஆர்ப்பரித்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் ஓய்வு குறித்து பேச்சுகள் எழுந்து வருகின்றன. அப்போதெல்லாம் தோனி சென்னை ரசிகர்களுக்கு முறையாக நன்றி செலுத்தாமல் ஓய்வு பெற மாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது 41 வயதாகும் தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதற்காகவே அவருக்கு விடை கொடுக்கவே எந்த ஸ்டேடியத்தில் சி எஸ் கே போட்டி நடந்தாலும், சி எஸ் கே ரசிகர்கள் மஞ்சள் நிற ஆடையணிந்து வந்து தோனியின் பேட்டிங்குக்கு காத்துக் கிடக்கின்றனர். அவர் பேட் செய்ய வரும் போது செல்போன்களின் டார்ச் லைட் அடித்து வித்தியாசமான வரவேற்பை வழங்குகின்றனர்.