ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளில் சி.எஸ்.கேவும் ஒன்று. தோனி தலைமையில் சி.எஸ்.கே இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ளது. 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சி எஸ் கே அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே 5 முறை, சி எஸ் கே வை விட அதிகமான எண்ணிக்கையில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
சி எஸ் கே அணி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இடையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி, 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது பூனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை சி எஸ் கே அணியை 200 போட்டிகளுக்கு வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை வேறு எவரும் படைத்ததில்லை.
இந்த சீசனிலும் தோனி கடைசி பேட்ஸ்மேனாக இறங்கி சில இன்னிங்ஸ்களில் சிக்ஸர்களை விளாசி வருகிறார். எந்த மைதானத்தில் போட்டி நடந்தாலும் மஞ்சள் உடையணிந்த ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்ய வந்ததும் செல்போன் டார்ச் லைட்களை அடித்து ஆரவாரம் செய்து வருகின்றனர். ஆனால் அவரின் பேட்டிங்கை இன்னும் சில பந்துகள் அதிகமாகக் காண வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் அவரை ஜடேஜாவுக்கு முன்பே களத்துக்கு வரவேண்டும் என சமூகவலைதளங்களில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் சுவாரஸ்யமான சாதனைப் புள்ளிவிவரம் ஒன்று ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 20 ஆவது ஓவர்களில் மட்டும் தோனி 290 பந்துகளை சந்தித்து 790 ரன்களை விளாசியுள்ளார். இதன் மூலம் அவரின் ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 270 ஆக உள்ளது. இந்த ரன்களில் 59 சிக்ஸர்களும், 49 பவுண்டரிகளும் அடித்து பவுலர்களுக்கு ‘நைட்மேராக’ இருந்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: வீம்புக்கு சண்ட போட்டதுல இதுதான் பலன்… கோலி & கம்பீருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?
தற்போது 41 வயதாகும் தோனிக்கு, இந்த சீசன்தான் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த முறை கோப்பையை வென்று அவர் வெற்றியோடு ஓய்வு பெறவேண்டும் என பலரும் விரும்புகின்றனர்.