சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டிதான் சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் போட்டியாக அமைந்தது. இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணியினர் மைதானத்தை சுற்றி வந்து சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது தோனி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தனர்.
மைதானம் முழுவதும் சுற்றிவந்த அணிக்கு காதைக்கிழிக்கும் அளவுக்கு கரகோஷங்கள் எழுந்தன. ஒரு கணத்தில் தோனியே அந்த சத்தத்தைக் கேட்டு நெஞ்சில் கைவைத்து எமோஷனலாக தனது அன்பை வெளிப்படுத்தினார். தோனி, இந்த நிகழ்வில் ரசிகர்களுக்காக சில அன்பளிப்புகளை கேலரிகளை நோக்கி வீசினார். இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ ஒருபுறம் சென்னை ரசிகர்களிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மற்றொருபுறம் சோகத்தையும் கொடுத்துள்ளது. அது என்னவென்றால் கடந்த சில போட்டிகளாகவே தோனி, இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார் என்பதுதான். அதனால்தான் அவர் அனைத்து போட்டிகளிலும் கடைசியாக பேட்டிங் செய்ய வந்து மிக சொற்பமான பந்துகளையே எதிர்கொள்கிறார்.
நேற்றும் அந்த வகையில் அவர் மூன்று பந்துகளையே எதிர்கொண்டார். அதுமட்டுமில்லாமல் முழங்கால் வலியோடு முழு இன்னிங்ஸும் அவர் ஓடியாடி விக்கெட் கீப்பிங் பணியை செய்கிறார். இதெல்லாவற்றையும் அவர் சிஎஸ்கே ரசிகர்களுக்காகவே செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின் போதும் அவர் முழங்காலில் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்திக் கொண்டவாறுதான் மைதானத்தை சுற்றி நடந்து வந்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி, ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன. பலரும் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து தோனியின் டெடிகேஷனைப் பாராட்டி வருகின்றனர்.
41 வயதாகும் தோனி, இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறுவார் என ரசிகர்களால் கருதப்படுகிறது. அதை உறுதி செய்வது போலவே நேற்றைய நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்த முறை சிஎஸ்கே கோப்பையை வென்று தோனியை வெற்றியோடு வழியனுப்ப வேண்டும் என்பதே இப்போது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.