சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சமீப காலமாகவே சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு சவாலாக இருந்து வருவது அடிக்கடி வியப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் ஐசிசி தொடர்கள் மட்டும் இல்லாமல் மற்ற இரு தரப்பு தொடர்களிலும் கூட பெரிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று இருந்த டெஸ்ட் தொடர் ஒன்றும் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் கூட பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதில் சற்று பதட்டமாகவே இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பாகிஸ்தான் அணி கடந்த ஒரு வருடமாக ஐசிசி அரங்கில் மட்டும் இல்லாமல் இருதரப்பு தொடர்களில் கூட சற்று தடுமாற்றத்தை தான் கண்டு வருகிறது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி என பல சிறப்பான வீரர்கள் இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியால் தொடர் வெற்றிகளை பெற முடியாமல் திணறியும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி இருந்தது.
பெரிய அணிகளுக்கு எதிராக தடுமாறும் பாகிஸ்தான் நிச்சயம் பங்களாதேஷ் அணியை சமாளித்து விடும் என எதிர்பார்த்தால் இரண்டு டெஸ்டிலும் தோல்வி அடைந்து தொடரையும் இழந்திருந்தனர். முதல் முறையாக வங்கதேசம் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை அதுவும் சொந்த மண்ணில் இழந்த பாகிஸ்தான் பரிதாபமான நிலையிலும் இருந்து வருகிறது.
அதே வேளையில் இன்னொரு பக்கம் அடுத்ததாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களை ஆட உள்ள பங்களாதேஷ் அணிக்கு பாகிஸ்தானை வீழ்த்தியது மிகப்பெரிய பலமாகவும் மாறி உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செய்த அதே மேஜிக்கை இந்திய மண்ணிலும் நிகழ்த்தி அவர்களை தோல்வியடைய செய்வோம் என வங்கதேச வீரர்கள் சவால் விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதே வேளையில் பாகிஸ்தானை போல இந்திய அணியை அவர்களால் சமாளித்து விட முடியுமா என்று கேட்டால் நிச்சயம் பெரிய கேள்விக்குறி தான். இந்த நிலையில் வங்கதேச வீரர்கள் இந்திய அணியை வீழ்த்தி விடுவோம் என்று தெரிவித்து வரும் கருத்துக்களை பற்றி தினேஷ் கார்த்திக் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் வங்கதேச அணியை சமாளிப்பது இந்தியாவுக்கு கடினமாக ஒன்றும் இருக்காது என்று நான் கருதுகிறேன். இந்தியாவிலேயே இந்தியாவை வீழ்த்துவது என்பது மிகப்பெரிய டாஸ்க். பாகிஸ்தான் மண்ணில் வங்கதேச அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இந்திய அணிக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்க மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.