இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் களமிறங்கப் போகும் முதல் தொடரே மிகப்பெரிய பலப்பரீட்சையாக இருக்கும் என்று தான் தெரிகிறது. இலங்கைக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடவுள்ள இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் அவரது பயிற்சிக்கு கீழ் இந்திய அணி ஒரு போட்டியில் கூட ஆடாமல் இருப்பதற்கு முன்பாகவே அவரைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களுக்காக இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது தான். கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் திரும்ப வந்தாலும் மற்ற பல முடிவுகள் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமையவில்லை.
ருத்துராஜ் அணியில் இடம்பெறாமல் போனது, கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது, ஹர்திக் பாண்டியா இருக்கும் போது சூர்யகுமார் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டது என பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய புதிராகவே இந்திய ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது தெரியாமலே இந்திய ரசிகர்கள் பெரிதாக இதனை விமர்சனம் செய்து வரும் நிலையில் கம்பீரின் யுக்தி இப்படித்தான் இருக்குமா என்றும் கேள்விகளையும் கடுமையாக எழுப்பி வருகின்றனர்.
ஒருவேளை கம்பீர் நினைத்த விஷயத்தை நிச்சயம் இந்த தொடரில் அவரால் செய்து முடிக்க முடியும் என்பதற்காக தான் இப்படி ஒரு அணியை தேர்வு செய்திருக்கிறார் என ஒரு பக்கம் ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வந்தாலும் போட்டிகளில் வெற்றியை பெறும் பட்சத்தில் மட்டும்தான் அதனை நிரூபித்தும் காட்ட முடியும்.
இதனால் கம்பீர் ஆடும் லெவனை எப்படி தேர்வு செய்வார்?, எந்த வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்? என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் பெரிதும் ஆவலில் இருந்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் கவுதம் கம்பீர் குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது.
“நான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய போது முதலில் சேவாக் கேப்டனாக இருந்தார். ஆனால் மூன்றாவது ஆண்டில் கம்பீர் புதிய கேப்டனாக உருவாகி இருந்தார். மிக சாதுர்யமாக நிறைய விஷயங்களை ஒரு நல்ல கேப்டனாக திட்டம் போடும் நிலையில் நான் அவருக்கு துணைக் கேப்டனாகவும் இருந்தேன்.
கம்பீர் ஒரு சிறந்த தலைவர். அவர் இந்திய அணியில் இரண்டு முக்கியமான விஷயத்தை கொண்டு வருவார் என நான் நினைக்கிறேன். அவர் எப்போதுமே வீரர்களுக்கான ஒரு நபர். அவர் தன்னுடைய வீரர்களை பாதுகாப்பார். அதுவே சர்வதேச போட்டிகளில் மிக முக்கியம். ஏனென்றால் இங்கே நிறைய வீரர்கள் சிறப்பாக ஆடாமல் போகும் பட்சத்தில் தனிமையாகவும், வெறுமையாகவும் உணர்வார்கள்.
அதேபோல இந்திய அணிக்கு நிச்சயமொரு புத்திசாலித்தனமான தந்திரம் நிறைந்த கோணத்தை கொண்டு வருவார் என்றும் தெரிகிறது. எப்போதுமே மிகத் தீவிரமாக இருந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றிகளை பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கக்கூடிய ஒருவர் தான் கம்பீர்” என தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.