முன்பெல்லாம் இந்திய அணியில் எப்படிப்பட்ட வீரர்களாக இருந்தாலும் ஓய்வின்றி நிறைய தொடர்களை தொடர்ந்து ஆடி வருவார்கள். ஆனால் தற்போது வேலைப்பளு அதிகமாக இருக்க தொடர்ந்து நிறைய கிரிக்கெட் தொடர்கள் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருவதால் இந்திய அணி வீரர்கள் சிலரும் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர் வரும் சமயத்தில் ஓய்வில் இருக்க வேறு வீரர்களுக்கு இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
சமீப காலத்தில் உதாரணமாக அப்படி சொல்ல வேண்டுமென்றால் நிறைய சம்பவங்களை நாம் கூறிக்கொண்டே போகலாம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியின் கேப்டனாக மாறியதற்கு பின்னர் அவர்கள் ஓய்வில் இருக்கும் போது ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், பும்ரா உள்ளிட்ட பலரும் இந்திய அணியை தலைமை தாங்கி வந்துள்ளனர்.
அப்படி ஒரு சூழலில் தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ரோஹித் ஷர்மாவும் டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவும் கேப்டனாக வழிநடத்தி வருகின்றனர். பலரும் ரோஹித் வரிசையில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், கில் உள்ளிட்டோரை கேப்டனாக தேர்வு செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பும்ரா தொடரலாம் என்றும் பலர் தங்களின் அபிப்ராயங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி ஒரு முறை பேசி இருந்த பும்ரா, கேப்டனாக செயல்பட விருப்பம் என்றும் தன்னுடைய கேப்டன்சியை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பும்ரா தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சூழலில் தற்போது பும்ரா கேப்டனாக இருக்கவே கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
“அனைவரும் கூறுவது போல மிகவும் கூலாகவும், முதிர்ச்சியிலும் தேர்ந்த வீரர் தான் பும்ரா. ஆனால் அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதால் மூன்று வடிவிலும் எப்படி அவரை ஆட வைக்க முடியும் என்ற பெரிய கேள்விக்கு தான் தேர்வுக்குழு விடை சொல்ல வேண்டும்.
பும்ரா போன்ற ஒருவரின் ஃபிட்னசை எப்போதும் கண்காணிப்பதுடன் மட்டுமல்லாமல் அவரை ஒரு வீரராக பாதுகாத்து முக்கியமான போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க வேண்டும். பும்ரா ஒரு கோஹினூர் வைரம் போன்றவர். அவரை பாதுகாத்து, சரியாக கவனித்து நீண்ட நாட்கள் அவரை ஆட வைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவர் ஆடும் வரை அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை இந்திய அணிக்காக ஏற்படுத்தக் கூடியவர்” என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார்.