ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சொத்தாக இருந்து வருகிறார். அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கிற்கு பிறகு இந்திய அணி கண்ட மிக முக்கியமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ரவி அஸ்வின் இருந்து வரும் சூழலில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளையும் கடந்துள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முன்பாக அணில் கும்ப்ளே மட்டும் தான் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் இதுவரை 619 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ள நிலையில் அஸ்வின் இதுவரை 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு சில ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து ஆடும் பட்சத்தில் நிச்சயம் அணில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்கி விடலாம் என்றும் தெரிகிறது.
ஆனால் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், அணில் கும்ப்ளே விக்கெட்டை நெருங்காமலேயே ஓய்வு பெற்று விடுவேன் என்றும் அதுதான் நான் அவரை போன்ற ஒரு ஜாம்பவானுக்கு செய்யும் பங்களிப்பு என்றும் நெகழ்ச்சியாக குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அதே வேளையில் இன்னொரு பக்கம் அவர் நிச்சயம் தனது சாதனையை உடைக்க வேண்டும் என அணில் கும்ப்ளேவே தெரிவித்து இருந்தார். இதனால் இனிவரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய மண்ணில் ஆரம்பத்தில் பட்டையை கிளப்பி வந்த அஸ்வின், தற்போது வெளிநாட்டு மண்ணிலும் விக்கெட்டுகள் எடுத்து வருவதுடன் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பெரிய பங்களிப்பை அளித்து வருவது இந்திய டெஸ்ட் அணிக்கு மிகப்பெரிய பலமாகவும் இருந்து வருகிறது.
அடுத்த ஆறு மாதங்களில் நிறைய டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி ஆட உள்ளதால் நிச்சயம் அஸ்வின் பந்து வீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் தற்போது 38 வயதாகும் அஸ்வின் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தனது சர்வதேச பயணத்திற்கு ஓய்வினை அறிவிக்கலாம் எனும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவரது இடத்தில் எந்த சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக இருப்பார் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “இந்திய அணி நிச்சயம் அடுத்த தலைமுறைக்கான ஆப் ஸ்பின்னரை இந்திய அணி பார்த்துக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ ஆடியிருந்தபோது மூன்று ஆப் ஸ்பின்னர்களை அவர்கள் முயற்சி செய்தனர்.
அதில் அனைவரையும் விட வாஷிங்டன் சுந்தர் தான் அஸ்வின் இடத்தை டெஸ்ட் போட்டிகளில் நிரப்புவார் என தெரிகிறது. தனக்கு கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் வாஷிங்டன் சுந்தர் மற்றவர்களுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆப் ஸ்பின்னராக இடம்பிடிப்பார் என நினைக்கிறேன்” என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார்.