ஆசியக் கோப்பை தொடருக்கான இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று மதியம் தொடங்கவுள்ளது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சரிக்கு சமமான பலத்துடன் மோதவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு வலிமையான அணியுடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியதே இல்லை.
நேபாளம் அணிக்கு எதிரான போட்டியிலேயே பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பவுலிங் எவ்வளவு பலமிக்கது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்று பாகிஸ்தான் அணி பவுலிங் சர்வதேச அணிகளுக்கு பீதியை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய அணி பவுலர்களும் தரமான பந்துவீச்சாளர்களாக உள்ளார்கள். முகமது ஷமி, பும்ரா, சிராஜ் என்று மூவரும் வெவ்வேறு வகையான பவுலர்களாக இருப்பதால், இந்திய அணியும் யாருக்கும் சளைத்த அணியல்ல என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்கள் மூவருமே இந்திய அணியில் இடம்பிடித்தால், பேட்டிங் வரிசை 7 வீரர்களுடன் முடிவடையும்.
இதனால் சிராஜ் அல்லது ஷமியை பெஞ்ச் செய்துவிட்டு ஷர்துல் தாக்கூரை களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசும் போது, இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும். இப்போது மட்டுமல்ல உலகக்கோப்பை தொடரிலும் அப்படியே களமிறங்க வேண்டும். 8வது வீரருக்கு பேட்டிங் அவசியம் என்று ஷர்துலை களமிறக்குவது மிகப்பெரிய தவறாக முடியும்.
பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் தங்களின் 10 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். தனியாளாக இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் திறமை உள்ளவர்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் அப்படியான வீரர் அல்ல. ஷர்துல் தாக்கூர் பிட்ஸ் அண்ட் பீசஸ் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியதை போல் விமர்சித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி எப்போதெல்லாம் சிக்கலில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டு இந்திய அணியை காப்பாற்றியவர் ஷர்துல் தாக்கூர். அனைவரும் நம்பிக்கை இழந்த போது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணிக்காக கடைசி வரை போராடியவர். இவரை கம்பீர் மோசமாக விமர்சித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.