இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் முடிவுக்கு வந்தது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று செப்டம்பர் 23-ஆம் தேதி நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் வில் ஜேக்ஸ் 94 ரன்களையும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாம் ஹெய்ன் 89 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 335 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் எளிதாக சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிவரை கடுமையான போராட்டத்தை அளித்து 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன்காரணமாக 48 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அவர்களது இந்த அதிரடியான ஆட்டமும், இலக்கை எட்ட வேண்டும் என்கிற அவர்களது போராட்டமும் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெறயிருக்கும் 50 ஓவர் உலககோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக தற்போது இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வழிக்கப்பட்டுள்ள வேளையில் ஜாக் கிரவுலி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இரண்டாம் தர இங்கிலாந்து அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.