இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அங்கு தலா நான்கு டி20 போட்டிகளும் ஒரு நாள் போட்டிகளையும் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள டி20 போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டி நடைபெற்ற வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்த அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழை பாதிப்பு காரணமாக இந்த போட்டியின் ஓவர்கள் 34 ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய தீர்மானித்தது.
இங்கிலாந்தின் ஓப்பனிங் ஜோடியான ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஹாரி புரூக் சரியான தொடக்கத்தை தரவில்லை. ஜானி பேர்ஸ்டோவ் ஆறு ரன்களும், ஹாரி புரூக் இரண்டு ரன்களும் எடுத்து வெளியேற, ஜோ ரூட் டக் அவுட் ஆகி வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ்சும் வந்த வேகத்தில் செல்ல, சொற்ப ரன்களிலேயே முதல் நான்கு விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஒரு சரிவை சந்தித்தது.
எனினும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர். கேப்டன் ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 30 ரன்கள் அடித்து வெளியேற, மொயின் அலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் களத்தில் நின்று நல்ல ஒரு பார்ட்னெர்ஷிப்பை உருவாக்கினர். ஒரு கட்டத்தில் மொயின் அலியும் வெளியேற அணியின் ஸ்கோர் அப்போது 103ஆக இருந்தது.
இங்கிலாந்தின் கதை முடிந்துவிட்டது என்று பலரும் என்னும் வேலையில், அடுத்து வந்த சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோனோடு ஜோடி சேர்ந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் ஒருகட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்க, அணியின் ஸ்கோர் மல மலவென ஏறியது. இந்த ஜோடி மட்டுமே 112 ரன்களை சேர்த்தது. இதில் சாம் கர்ரன் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த டேவிட் வில்லி 7 ரன்கள் எடுத்தார். இதில் இறுதிவரை நாட் அவுட்டாக இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 78 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடக்கம். மொத்தமாக 34 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 226 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பவுலங்கை பொறுத்த வரை டிரெண்ட் போல்ட் ஏழு ஓவர்கள் வீசி, 37 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக பேட்டிங் ஆட வந்து நியூசிலாந்து அணியின் ஓபனிங் வீரரான ஃபின் ஆலன் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டாக, முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய டெவோன் கான்வேவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் மட்டுமே அந்த அணியில் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக வில் யங் 33 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்னை கூட தாண்டவில்லை.
இதன் காரணமாக 26.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு வெறும் 147 ரன்களை மட்டுமே நியூஸிலாந்து அணி சேர்த்தது. இங்கிலாந்தின் பவுலிங் பொறுத்தவரை டேவிட் வில்லி மற்றும் ரீஸ் டோப்லி தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் தற்போது இரு அணிகளும் சமமான நிலையில் உள்ளனர். அடுத்து நடக்க உள்ள போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் தொடரை வெல்வார்கள்.