இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் – கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்து பேஸ் பால் திட்டத்துடன் எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறார்கள். எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் பின் வாங்காமல் ஆக்ரோஷமாக வெற்றிக்காக போராடி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆஷஸ் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும், 3வது போட்டியில் அசாத்திய எழுச்சியை பெற்றது.
அதேபோல் இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தான் அணியும் பேஸ் பால் ஆட்டத்தை பின்பற்றி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன் ரேட்டில் விளையாடி வருகிறது. அதேபோல் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடியது.
இதனால் மற்ற அணிகளும் பேஸ் பால் ஆட்டத்தை கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனால் பேஸ் பால் திட்டம் குறித்து இஷான் கிஷனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து இஷான் கிஷன் பேசும்போது, இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டம் பாணியிலான ஆட்டம் சுவாரஸ்யமானது.
ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமாக ஆட வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். எப்போதும் சூழலுக்கு ஏற்ப ஆட வேண்டும் என்பதே திட்டம். அதுதான் சரியானதாக இருக்கும். அதேபோல் இங்கிலாந்து அணி பேஸ் பால் திட்டத்தை பிளாட் பிட்ச்களில் விளையாடி வருகிறது. ஆனால் பவுன்ஸ் மற்றும் திரும்பும் பிட்ச்களில் விளையாடவில்லை.
இங்கிலாந்து அணி பிளாட் பிட்ச்களில் இல்லாமல் பவுன்ஸ் மற்றும் டர்னிங் பிட்ச்களில் பேஸ் பால் திட்டத்துடன் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறன் வெளியில் தெரியும். என்னை பொறுத்தவரை பிட்சின் தன்மைக்கேற்ப விளையாட வேண்டும். அப்படியே பிளாட் பிட்ச்களில் விளையாடினால், இந்திய அணியில் ஏராளமான பவர் ஹிட்டர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளர்.
வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இஷான் கிஷன், நேரடியாக இங்கிலாந்து அணியை விமர்சித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.