- Advertisement 3-
Homeவிளையாட்டுஎங்க பவுலிங் வீக்னு தெரியும், ஆனா.. மும்பை டீம்ல இருக்குற வித்தியாசமே இதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட...

எங்க பவுலிங் வீக்னு தெரியும், ஆனா.. மும்பை டீம்ல இருக்குற வித்தியாசமே இதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட பாப்..

- Advertisement 1-

ஒவ்வொரு தொடரிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருக்கும் நிலையில் தான் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை கையில் எடுத்து வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி அடைந்த அவர்கள் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பிய ஆர்சிபி, கொல்கத்தா, லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியை தழுவி இருந்தது. 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்ததால் மீதி உள்ள ஒன்பது போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்பட்டது.

அப்படி ஒரு நிலையில் தான் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்கள் எதிர்கொண்டனர். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் விராட் கோலி, மூன்று ரன்களிலும் மேக்ஸ்வெல் ரன் எடுக்காமலும் அவுட்டாகி இருந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தாத பாப் டு பிளெஸ்ஸிஸ் 61 ரன்கள் எடுக்க, அதிக விமர்சனத்தை சந்தித்த இளம் வீரர் ராஜத் படித்தரும் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் விஸ்வரூபம் எடுக்க அந்த அணி 196 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்ந்தது. ஒன்பது ஓவர்களிலேயே நூறு ரன்களை அவர்கள் கடக்க, பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்த அவர், உடனே அவுட் ஆனாலும் அடுத்து வந்த திலக் வர்மா கூட அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்ததால் 16 வது ஓவரிலேயே 197 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்.

- Advertisement 2-

தோல்வியால் துவண்டு போன மும்பை ரசிகர்கள், அடுத்தடுத்து இரு வெற்றிகளால் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் விரக்தியில் பேசுகையில், “இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ளவே கடினமாக உள்ளது. இங்கே டியூ அதிகமாக இருந்தது. அதே போல, டாஸை வெல்ல வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியினரும் மிக சிறப்பாக ஆடி இருந்தனர். எங்கள் மீது அவர்கள் நெருக்கடி கொடுக்க பவர்பிளேவில் நாங்கள் நிறைய தவறுகளையும் செய்திருந்தோம்.

196 ரன்கள் என்ற ரன்னையே அவர்கள் எளிதாக மாற்றி விட்டனர். டியூவில் எங்கள் பந்து வீச்சாளர்கள் சரியாக இலக்கை நோக்கி வீசவும் சிரமப்பட்டனர். சில முக்கியமான தருணங்களையும் நாங்கள் தவற விட்டோம். பும்ரா எப்போது எல்லாம் பந்தை கையில் வைத்து கொண்டிருக்கிறாரோ, அப்போதெல்லாம் அவருக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், அவர் தனது திறன்களால் நெருக்கடியிலும் கூட சிறப்பாக பந்து வீசினார்.

மலிங்காவின் வழிகாட்டுதலில் நிறைய வேரியேஷன்களுடன் தொடர்ந்து தன்னை மேம்படுத்தி கொண்டே வருகிறார் என நினைக்கிறேன். அவர் எங்கள் அணியில் இருந்திருந்தால் நான் அதனை மிகவும் விரும்பி இருந்திருப்பேன். எங்கள் பவுலிங் பலமாக இல்லை என்பது தெரியும், அதனை கொண்டு சிறந்த வழிகளை அறிந்து செயல்பட வேண்டும். பேட்டிங்கிலும் முதல் 5 ஓவர்களில் நிறைய ரன்களை அடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்