பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 5 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ள ஆர்சிபி அணி இந்த முறை வெற்றி பெற்று அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது பெங்களூர் அணி.
இந்த மைதானம் சிறிய மைதானம் என்பதால் இங்கே முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்கள் அடித்தாலே சேசிங் செய்பவர்கள் அதனை எளிதாக வென்று விடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி இருந்தபோதிலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ஒரு சில இடைவெளியை விட்டுவிட்டு பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பி இருந்தது. இதன் காரணமாக இருபது ஓவர்கள் முடிவில் அவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தனர்.
தொடக்க வீரர் விராட் கோலி 89 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்ததால் அவர்கள் சுலபமாக வென்று விடுவார்கள் என என்பதும் தெரிய வந்தது. அதன்படி 17 ஆவது ஓவர் முடிவதற்குள்ளாகவே இலக்கை எட்டிப் பிடித்த அவர்கள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
அந்த அணியில் பிலிப்ஸ் 30 ரன்களும், நரைன் 47 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் எடுக்க அவர்களின் வெற்றியும் எளிதாக அமைந்திருந்தது. இதுவரை மூன்று போட்டிகள் இந்த தொடரில் ஆடி உள்ள பெங்களூர் அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தோல்விக்கு பின்னர் பேசிய அந்த அணியின் கேப்டன் பாப் டூப்ளிசிஸ், “முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு பேட்டிங் செய்யவே மிகவும் சிரமமாக இருந்தது. பந்துகள் இரண்டு விதமாக மாறி மாறி வந்ததால் அதனை எதிர்கொள்ளவே சிரமப்பட்டோம். கோலி கூட சில பந்துகளை அடிக்க போராடி இருந்தார். ஆனால் 2 வது இன்னிங்சில் பேட்டிங் இன்னும் எளிதானது. பவர் பிளேவில் நாங்கள் பந்து வீசியபோது ஒரு சில விஷயங்களை செய்ய முயற்சி செய்தோம். ஆனால் சால்ட் மற்றும் நரைன் ஆகியோர் பந்துகளை அடித்து ஆடியதால் போட்டியும் அவர்கள் பக்கம் ஆனது.
இதனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் பக்கம் நெருக்கடி உருவானது. நரைன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஸ்பின்னர் பக்கம் போனால் அவரை கட்டுப்படுத்த முடியாது என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம். அவரும் சால்ட்டும் இணைந்து ஆடிய விதம் அபாரமாக இருந்தது. முதல் ஆறு ஓவர்களிலேயே போட்டியை உடைத்து விட்டனர்.
எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தும் சரியாக சுழல்வதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. அதே போல இடதுகை சுழற்பந்து வீச்சாளரையும் வெங்கடேஷ் ஐயர் எளிதாக எதிர்கொண்டதால் அந்த ஆப்ஷனுக்கும் நான் செல்ல விரும்பவில்லை. முதல் இன்னிங்சை பார்த்துவிட்டு கரன் ஷர்மா மாதிரியான பந்து வீச்சாளரை ஆட வைக்கலாமென நினைத்தோம்.
ஆனால் அதைவிட மெதுவாக பந்து வீசும் ஒருவர்தான் இங்கு தேவை என்ற நோக்கில் தான் விஷாகிற்கு வாய்ப்பு கொடுத்தோம். ரசல் தனது பந்துவீச்சில் 80 சதவீதத்தை கட்டர் பந்துகளாக தான் வீசியிருந்தார். இதனால் இந்த போட்டியில் சிறந்த பந்து வீச்சாளரான அவரிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம்” என பாப் டூபிளெஸ்ஸிஸ் கூறியுள்ளார்.