மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய நிலையில் அதே உத்வேகத்துடன் ஆடவர் கிரிக்கெட் அணியும் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் தொடரில் 16 ஆண்டுகளாக இருந்து வரும் ரசிகர்களின் ஏக்கத்தை இந்த முறை கோப்பையை கைப்பற்றி முடித்து விடுவார்கள் என அனைவரும் கருதினர்.
ஆனால் இந்த சீசனில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அனைத்துமே ஆர்சிபிக்கு தலைகீழாக தான் மாறிப்போனது. பந்து வீச்சில் பலவீனமாக இருந்தும் சிறந்த பந்துவீச்சாளர்களை அவர்கள் தேர்வு செய்யாமல் தொடர்ந்து பவுலிங்கில் சொதப்பி இந்த சீசனை தொடங்கியது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தாங்கள் ஸ்ட்ராங்காக இருக்கும் பேட்டிங்கிலும் பெரிதாக யாரும் ஜொலிக்கவில்லை. கோலி, தினேஷ் கார்த்திக் மட்டும் முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில் பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் என யாருமே நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் கதிரடியாக ஆடியதால் ஒரு போட்டியை அவர்கள் வென்றிருந்த நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர்கள் தோல்வி அடைந்த நிலையில் தான் லக்னோ அணிக்கு எதிராக தங்களின் மூன்றாவது தோல்வியையும் இந்த தொடரில் அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆர்சிபி அணி எப்போதுமே பலமாய் இருந்திருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக அவர்கள் தொடர்ந்து தொடர் தோல்விகளையும் சந்திக்கின்றனர்.
அது இந்த முறையும் நடந்து வரும் நிலையில் ஒரு போட்டியில் கூட எதிரணிக்கு நெருக்கடி கொடுக்காமல் அவர்கள் ஆடி வருவது தான் ரசிகர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த முறை சொந்த மைதானத்தில் இரண்டு போட்டியில் தோற்ற ஒரே அணியும் பெங்களூரு தான். கொல்கத்தா அணிக்கு எதிராக சின்னசாமி ஸ்டேடியத்தில் தோல்வி அடைந்திருந்த பெங்களூரு, லக்னோ அணிக்கு எதிராக 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போதிலும் அதனை எட்ட முடியாமல் தோல்வியடைந்து போனது. 20 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாமல், 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இன்னும் 10 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், அதில் குறைந்தது 8 போட்டிகள் வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்குள் பலமாக நுழைய முடியம் என்ற நிலை உள்ளது. இதனிடையே, லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசியிருந்த ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், “டி காக் மற்றும் பூரன் கேட்ச்களை தவற விட்டது எங்களது வெற்றியையும் இழக்க வைத்தது. இதனால் 60 முதல் 65 ரன்கள் அதிகமாக கொடுத்தோம்.
நீங்கள் இது வரை சந்திக்காத மயங்க் யாதவின் வேகத்தை இந்த தொடரில் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் நேரம் எடுத்து கொண்டு தயாராக வேண்டும். ஆனால் அவர் லெந்த்தை கட்டுப்படுத்தி துல்லியமாக பந்து வீசுவது அசத்தலாக உள்ளது. நாங்கள் பந்து வீச்சில் இத்தனை சிறப்பாக செயல்படுவோம் என நினைக்கவில்லை. மேக்ஸ்வெல் சிறப்பாக பந்து வீசி இருந்தார். இரண்டு பேர் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைக்கும் படி ஆட வேண்டும். அப்படிப்பட்ட வீரர்கள் தாங்களாக முன் வந்து தயாராக வேண்டும்” என பாப் தெரிவித்துள்ளார்.