இந்திய அணிக்காக 18 வயதிலேயே அறிமுகமானவர் பிரித்வி ஷா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய பிரித்வி ஷா, அடுத்தடுத்து ஊக்கமருத்து சர்ச்சை, யூட்யூபருடன் சாலையில் மோதல், பேட்டிங் ஃபார்ம் என்று பல்வேறு சிக்கல்களில் சிக்கி திறமையை வீணடித்தார்.
இதனால் மும்பை அணிக்காக ஆடிய வினோத் காம்ப்ளி போல், பிரித்வி ஷாவும் திறமையிருந்தும் பாழாய் போய்விடுவாரோ என்று ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தினார். இதுமட்டுமல்லாமல் நண்பர்களுடன் கூட நேரம் செலவழிக்காத அளவிற்கு மோசமான மனநிலையில் இருப்பதை கூட பெருமையாக பேச தொடங்கினார்.
இதனால் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது உள்ளூர் தொடர்களிலும் பேட்டிங்கில் சொதப்பினார். இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மாடர்ன் ஒருநாள் கோப்பைத் தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக இங்கிலாந்தில் பிரத்யேக பயிற்சியையும் பிரித்வி ஷா எடுத்துக் கொண்டார்.
முதல் போட்டியில் மோசமாக ஆட்டமிழந்தாலும், அடுத்ததாக சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்து மிரட்டலான சாதனைகளை படைத்தார். அந்தப் போட்டியில் மட்டும் 11 சிக்சர்கள், 28 பவுண்டரிகள் என்று வேற லெவல் இன்னிங்ஸை ஆடினார். அதுமட்டுமல்லாமல் முதல்தர போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த ஆட்டம் பற்றி பிரித்வி ஷா பேசும் போது, இந்திய அணியில் ஆட வேண்டும் என்பதே கனவு. குறைந்தது 12 முதல் 14 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக தான் போராடி வருகிறேன். ஆனால் இந்திய அணியில் இருந்து நான் ஏன் நீக்கப்பட்டேன் என்பதே எனக்கு தெரியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கூட தேர்வு செய்யப்பட்டேன். சிலர் ஃபிட்னஸ் பிரச்சனை என்று சொல்கிறார்கள். ஆனால் என்சிஏ-வில் உள்ள அனைத்து சோதனைகளிலும் பாஸ் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள், ஏதோவொரு ஒரு போட்டியில் இரட்டை சதம் விளாசிவிட்டு இவ்வளவு பேசுவது தேவையில்லை. முதலில் ஃபிட்னஸில் கவனம் செலுத்துவங்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.