உலகளவில் நடக்கும் டி 20 போட்டி லீக்குகளில் இன்று முன்னிலையில் இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் லீக்தான். வீரர்கள் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் வாரியங்களிடம் பெறும் சம்பளத்தை வெறும் 2 மாதங்களில் ஐபிஎல் தொடரின் மூலம் சம்பாதித்து விடுகிறார்கள்.
அந்த அளவுக்கு ஐபிஎல் மூலம் பணமழை கொட்டுகிறது. பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐபிஎல் போல லீக்குகளை நடத்தினாலும், ஐபிஎல் அருகே வரமுடியவில்லை. ஐபிஎல் போட்டி நடக்கும் இரண்டு மாதங்களும் எந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பெரிதாக சர்வதேச போட்டிகளை திட்டமிடுவதில்லை.
இத்தகைய ஐபிஎல் தொடர் ரசிகர்களை ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுத்து பொழுதுபோக்கிற்கு உத்தரவாதமும் அளிக்கிறது. ஐபிஎல் மூலம் இளம் வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சர்வதேச அணிகளில் வாய்ப்புகளைப் பெற்று கலக்கி வருகின்றனர்.
என்னதான் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சிகளில் அனைத்து வசதிகளோடு பார்த்தாலும், மைதானத்தில் நேரில் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களை சும்மா விடுவதில்லை. போட்டியை பார்க்க எத்தனை தூரமாக இருந்தாலும் அதை பார்க்க வரும் வெறித்தன ரசிகர்களும் இருக்கிறார்கள். அப்படி தோனியைப் பார்க்க இரண்டு ரசிகர்கள் வெறித்தனமான செயல்களில் ஈடுபட்டதை இப்போது பார்ப்போம்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரில் தோனியைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே தன்னுடைய இருசக்கர வாகனத்தை விற்ற நபர் கோவாவில் இருந்து சென்னை மைதானத்துக்கு சென்றுள்ளார். இதை அவர் தான் வைத்திருந்த பதாகையில் எழுதிக் காட்ட அது கேமராவில் சிக்கி இப்போது வைரல் ஆகி வருகிறது. மற்றொரு நபர் நியுயார்க்கில் இருந்தில் பெங்களூர் வந்து தோனி விளையாடுவதை பார்த்துள்ளார். இது சம்மந்தமான பதாகைகளை அவர் தன் கையில் ஏந்தியிருக்க, அதுவும் டிவி கேமராவில் பதிவாகி வைரல் ஆனது.
கோலி ரசிகர் ஒருவர் 8985 மைல்கள் தாண்டி, ஒர்லாண்டோவில் இருந்து ஹைதெராபாத் வரை வந்து கோலி ஆடிய மேட்சை பார்த்துள்ளார். அதே போல ஒரு ரசிகர் கூட்டம் கோலியை ஆதரிக்க 2,376 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நேபாளில் இருந்து பெங்களூர் வந்துள்ளனர். பெரும்பாலும் இதுபோன்ற ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நாயகர்களான தோனி, கோலி ஆகியோரைப் பார்ப்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.