இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக கிரிக்கெட் தொடர் ஆடவுள்ள நிலையில், இது ஒரு பக்கம் எதிர்பார்ப்பையும், இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் கூட அதிகம் சம்பாதித்து வருகிறது. சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக மாறி இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவின் பதவி பறிபோனது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது.
இதே போல, சில முக்கியமான இளம் வீரர்கள் ஃபார்மில் இருந்தும் அவர்களைத் தாண்டி மற்ற சில வீரர்களை அணியில் எடுத்தது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரின் கேள்விக்கும் ஆளாகி இருந்தது. ஏற்கனவே டி20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக தேர்வான இந்திய வீரர்களே அதிகம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அதே போன்றொரு நிலை தான் இலங்கை தொடருக்கு முன்பாகவும் ஏற்பட்டுள்ளது.
டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இல்லாமல் அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டதாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். இதே போல, டி20 அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன், அதை விட ஒரு நாள் போட்டிகளில் தான் நல்ல சராசரி உள்ளிட்ட புள்ளி விவரங்களை வைத்துள்ளார்.
அப்படி இருந்தும் அவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதே போல, ஷ்ரேயஸ் ஐயர், கே எல் ராகுல் உள்ளிட்ட பலர் இருந்தும் துணை கேப்டன் பதவி இரண்டு வடிவிலும் சுப்மன் கில்லிற்கு கிடைத்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரது கேப்டன்சியில் குறைகளையே ரசிகர்கள் பெரும்பாலும் கண்ட நிலையில், மற்ற பல வீரர்களை விட்டு தற்போது துணை கேப்டன் பதவியை எப்படி கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
இதனிடையே, இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் கூறி இருந்தனர். இதில் பல விஷயங்களுக்கு சிறப்பாக பதில் கூறி இருந்தாலும் ஒரு சில முடிவுகள் இன்னும் புதிராகவே உள்ளது. ருத்துராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அணியில் இடம்பெறாமல் போனது பற்றி பேசி இருந்த அவர்கள், அது ஒரு கடினமான முடிவு தான் என்றும் 15 பேரை மட்டும் தேர்வு செய்யும் போது சில வீரர்கள் இடம்பெறாமல் போவார்கள் என்றும் கூறி இருந்தனர்.
ரிங்கு சிங் சிறப்பாக ஆடியும் டி20 உலக கோப்பைத் தொடரில் இடம்பெறாமல் போனதை உதாரணமாகவும் கம்பீர் குறிப்பிட, இந்த பதில் சரியானதாக இல்லை என்பது தான் ரசிகர்கள் தரப்பு விளக்கமாக உள்ளது. இதற்கு காரணம், ருத்து மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை விட சுமாராகவே ஆடியிருந்த கில், ரியான் பராக், ஷிவம் துபே உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது தான்.
இதனால், ருத்துராஜை அணியில் தேர்வு செய்யாமல் போனதற்கு சரியான விளக்கம் இதுவல்ல என ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.