இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முதல் 2 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனுபவ சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 21 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல் வாஷிங்டன் சுந்தர், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசியக் கோப்பை அணியில் மாற்று வீரராக இருந்த சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் அளவிற்கு புறக்கணிப்பை சந்தித்த வீரர் யாருமே இருக்க முடியாது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு அரைசதம் விளாசியும், ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த சராசரியை வைத்திருந்தும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை மட்டுமல்லாமல் ஆசியப் போட்டிகளுக்கான அணியில் கூட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. ஆசியப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திலக் வர்மா, ருதுராஜ் உள்ளிட்டோர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறப் போவதில்லை என்று பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்படவில்லை.
அதேபோல் சஞ்சு சாம்சனுக்கு லண்டனில் நடைபெற்ற ஒருநாள் கவுண்டி கிரிக்கெட் வாய்ப்பு கிடைக்கும் தருவாயில் இருந்தது. ஒருவேளை ஆசியக் கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்றால், பிரித்வி ஷாவை போல் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடலாம் என்ற முடிவில் சஞ்சு சாம்சன் இருந்தார்.
ஆனால் ஆசியக் கோப்பைக்கான மாற்று வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கேஎல் ராகுல் முழுமையான ஃபிட்னஸை எட்டியவுடன் ஆசியக் கோப்பை தொடரின் பாதியிலேயே சஞ்சு சாம்சனை பிசிசிஐ வீட்டிற்கு அனுப்பியது. சஞ்சு சாம்சனை இந்திய அணி தொடர்ந்து புறக்கணித்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.