முதல் இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற முக்கிய காரணமாக யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் அனைவருமே மூன்றாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக கடுமையாக சொதப்பி இருந்தனர். பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரகுமான் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் இந்த முறை ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தாலும் அதிக ரன்களை வாரி வழங்கி இருந்தார்.
துஷார் தேஷ்பாண்டே, பதிரானா தவிர அத்தனை பந்து வீச்சாளர்களும் அதிக ரன்களை வாரி வழங்க டெல்லி அணி 191 ரன்களை எடுத்திருந்தது. பந்து வீச்சில் எப்படி சொதப்பினார்களோ அதே போல பேட்டிங்கில் முதல் போட்டிகளில் பட்டையை கிளப்பி இருந்த ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகியோரை தான் ரசிகர்களும் பெரிதாக நம்பி இருந்தனர்.
ஆனால் இந்த மூவருமே ரன் சேர்க்காமல் அவுட் ஆனது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருந்தது. ருத்துராஜ் மற்றும் ரவீந்திரா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக சிவம் துபே நிறைய பந்துகள் சந்தித்து களத்தில் நின்ற போதும் அவர் முந்தைய போட்டிகளை போல ரன் சேர்க்க முடியவில்லை.
இதனால் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்தது தோனியுடைய பேட்டிங் தான். கடந்த சில சீசன்களாக பெரிய அளவில் பேட்டிங்கில் ரன் சேர்க்காமல் திணறி வந்த தோனி இந்த முறை தான் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை பறக்க விட்டிருந்தார்.
ஒரு சில ஓவர்கள் முன்பாகவே தோனி பேட்டிங் செய்ய வந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை சிஎஸ்கே அணி பெற்றிருக்கும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. ஆனால் அதே வேளையில் அவருடன் கடைசி வரை பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா, 17 பந்துகளில் இரண்டு ஃபோர்களுடன் 21 ரன்கள் தான் எடுத்திருந்தார். அவர் ஒருவேளை அதிரடியாக ஆடி ரன் சேர்த்திருந்தால் கூட சிஎஸ்கே அணி இந்த முறை வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால் அவருக்கு பின்பு வந்த தோனி சிறப்பாக ஆடிவந்த நிலையில் தற்போது ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்து வருகின்றனர். தற்போது தோனி எட்டாவது வீரராக பேட்டிங்கில் களமிறங்கி வரும் நிலையில் ஜடேஜா, சமீர் ரிஸ்வி ஆகியோருக்கு முன்பாக ஐந்தாவது அல்லது ஆறாவது வீரராக அவர் களமிறங்க வேண்டும் என்றும் அப்போது தான் இது போன்ற தோல்வி பெறும் போட்டிகளில் கூட போட்டியின் விதியை அவரால் மாற்றி எழுத முடியும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தோனி எப்படி இந்திய அணிக்காக ஆடினாரோ அதே போன்ற பேட்டிங்கை இப்போது வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் இந்த தொடர் முழுக்க தோனியின் சரவெடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது பலரின் பரவலான கருத்தாக உள்ளது.