வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பைத் தொடருக்காக தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடர் என்பதால், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனை இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் காயமடைந்த இந்திய வீரர்களான கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்ப காத்திருக்கின்றனர். பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அயர்லாந்து டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி எந்த தகவலும் இல்லாமல் என்சிஏ மற்றும் பிசிசிஐ இரு தரப்பும் அமைதி காத்து வருகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் பதிவிட்டு வருகிறார். ஆனால் பேட்டிங் பயிற்சியை தொடங்கியதாக தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் 4வது இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் சரியான ஆள் என்றும் ரசிகர்கள் நினைத்திருந்தனர். அந்த வரிசையில் தான் ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடி வந்தார். காயமடைந்தாலும் ஆசிய கோப்பைத் தொடருக்குள் இந்திய அணிக்கு திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவில் ரசிகர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் பற்றி ரோகித் சர்மாவிடம் எழுப்பிய கேள்விக்கு, ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். முழுமையான உடல்தகுதியை இதுநாள் வரை எட்டவில்லை. இதனால் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.