இந்தியாவில் உலக்கோப்பை தொடருக்கான ஃபீவர் தொடங்கிவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்கள் உலகக்கோப்பை பற்றி பேச்சையே பேசி வருகிறார்கள். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் காயம் காரணமாக விலக, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இந்திய அணியின் அனைத்து வகையான சுழற்பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர். மிஸ்ட்ரி ஸ்பின்னர் குல்தீப் யாதவ், இடதுகை ஸ்பின்னர் ஜடேஜா மற்றும் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் என்று மூவரும் மூன்று வகையில் பந்துவீசும் திறன் கொண்டவர்கள். இதனால் இந்திய அணியின் பலம் அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் விளையாடிய வீரேந்தர் சேவாக், கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில், உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு அட்வைஸ் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது வீரர்களுக்கான மீட்டிங் நடக்கும் போது அனைவரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தோம்.
செய்தித்தாள்கள், வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் ஆகியவற்றை படிக்கவோ, கேட்கவோ வேண்டாம் என்று முடிவு செய்தோம். அதனை ஒரு விதிமுறையாகவே பின்பற்றி, தொடரில் விளையாடினோம். அதேபோல் ஒரு குழுவாக இணைந்து அனைத்து செயல்பாடுகளையும் செய்வோம் என்று முடிவு செய்தோம். அதனை தோனி, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இருவரும் தீவிரமாக பின்பற்றினர்.
அதேபோல் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், பின்பாகவும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். அப்போது பெரும்பாலும் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசினோம். அதேபோல் சாப்பிடும் போது திட்டங்களை பற்றி பேசுவோம். அப்போது நானும் என் தரப்பில் இருந்து சில விஷயங்களை பகிர்வேன். எங்களை சந்திக்கும் ராணுவ வீரர்கள், மேலாளர்கள், வெய்டர்கள் என்று அனைவரும் எங்களை உலகக்கோப்பை வென்றுவிடுங்கள் என்று கூறினார்கள்.
அதனால் எங்களுக்கு கூடுதலாக அழுத்தம் ஏற்பட்டது. ஆனால் தோனி ஒன்றை மட்டும் தான் கூறுவார். எப்போதும் செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று கூறுவார். அதேபோல் நமது செயல்பாடு சரியாக இருந்ததால் மட்டுமே வெற்றிபெற்றோம் என்று கூறுவார். அதனை ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் தற்போது பின்தொடர வேண்டும் என்று நினைப்பதாக சேவாக் தெரிவித்துள்ளார்.