இதுவரை 16 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ஆனால், முதல் ஐபிஎல் சீசனில் இருந்தே பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதே இல்லை. கெயில், டிராவிட், கும்ப்ளே, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் என ஏராளமான தலைச்சிறந்த வீரர்கள் ஆர்சிபி அணிக்காக ஆடி உள்ளனர். இருந்தும் ஏனோ, அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை தொடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. 3 முறை ஐபிஎல் இறுதி போட்டி, பலமுறை ஐபிஎல் பிளே ஆஃப் என ஆர்சிபி முன்னேறிய போதெல்லாம் அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.
ஒவ்வொரு முறையும் கோப்பையை வென்று விடும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் இருக்கும் சூழலில், 2024-ல் நிச்சயம் நடக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், ஆர்சிபி தங்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஹேசல்வுட், ஹசரங்கா உள்ளிட்ட பல வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளனர். தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை 17.50 கோடி ரூபாய்க்கு டிரேடிங் முறையில் வாங்கி உள்ளது.
இந்த நிலையில், கேமரூன் கிரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இத்தனை கோடி பணத்திற்கு கிரீன் தகுதி ஆனவரா?. கிரீனின் திறமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஆர்சிபி வரிசையை பார்க்கும் போது இது சரியாக தெரியவில்லை. மும்பை அணியில் சரியான வீரராக இருந்த அவர், ஆர்சிபிக்கு தகுதியான வீரராக தெரியவில்லை.
ஏனென்றால், ஆர்சிபி அணிக்கு சிறந்த பந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலை இருக்கும் போது அவர்கள் பேட்ஸ்மேன்கள் மீதே அதிக பணத்தை செலவு செய்கின்றனர். இதனால் ஏலத்தில் தலைச்சிறந்த பவுலர்களை எடுக்க பணமில்லாமல் போகும் நிலை வரும். ஐபிஎல் தொடரை ஜெயிக்க வேண்டும் என்றால், ரன்களைக் கட்டுப்படுத்தும் தரமான பவுலர்கள் தேவை. எனவே இது பெங்களூர் அணியின் தவறான முடிவு என தோன்றுகிறது. கேமரூன் கிரீன் வேறு ஏதேனும் அணிக்கு பொருத்தமான வீரராக இருந்திருப்பார்” என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.