கிரிக்கெட்டில் சில அணிகளுக்கு எதிராக சில வீரர்கள் எப்போதும் சிறப்பாக விளையாடுவார்கள். மும்பைக்கு எதிராக பட்லர், பெங்களூரு அணிக்கு எதிராக தோனி, இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலி இந்த வரிசையில், அனைவருக்கும் முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேவாக் என்று தாராளமான எழுதலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் 1,276 ரன்களை விளாசியுள்ளார்
முல்தானில் 309, லாகூரில் 254, பெங்களூருவில் 201 என்று சேவாக் செய்த சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 31 போட்டிகளில் ஆடியுள்ள சேவாக், 2 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 1071 ரன்கள் குவித்துள்ளார். பிட்ச், மைதானம், நாடு கடந்த பாகிஸ்தான் அணி என்றாலே சேவாக் வெளுத்து வாங்கியுள்ளார்.
2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய வென்ற பின், மீண்டும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தது. அந்த டெஸ்ட் தொடரில் மட்டும் சேவாக் 544 ரன்கள் விளாச, தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. அதேபோல் ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்று அசத்தியது.
இந்த ஒருநாள் தொடரில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நவீன் உல் ஹசன் சில தகவலை கூறியுள்ளார். அவர் பேசும் போது, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் இருந்தது. 3வது போட்டியிலும் சேவாக் பாகிஸ்தான் அணியின் அத்தனை பந்துவீச்சாளர்களையும் விரட்டி விரட்டி அடித்து நொறுக்கினார். அப்போது, இம்சமாம் உல் ஹக்கிடம் சென்று, நான் பந்துவீசுகிறேன் என்றேன்.
அதற்கு அவர், யார் பந்து போட்டாலும் விளாசுகிறார்கள். நீயும் வேண்டுமென்றால் முயற்சித்து பார் என்று பந்துவீச அனுமதியளித்தார். நான் வேகமாக ஓடி வந்து ஸ்லோ பவுன்சர் ஒன்றை வீசினேன். அதனை சேவாக்கை சரியாக அடிக்க முடியவில்லை. இதன்பின் சேவாக்கிடம் நேரடியாக சென்று, உனக்கு எப்படி விளையாடுவதென்றே தெரியவில்லை.. நீ மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால், சர்வதேச கிரிக்கெட் பக்கமே வந்திருக்க முடியாது என்றேன். அதற்கு அவர் சில வார்த்தைகளை பதிலாக அளிக்க, அவர் கோபப்படுத்திவிட்டேன் என்பதை அறிந்தேன்.
அடுத்த பந்தை ஸ்லோ பாலாக வீச, அதனை அடிக்க முயன்று சேவாக் ஆட்டமிழந்தார். நல்ல வேளையாக அந்தப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால் நவீன் உல் ஹசனின் கூற்று பொய் என்று தெரிய வந்துள்ளது. அந்தப் போட்டியில் சேவாக்கின் விக்கெட்டை 74 ரன்களில் நவீன் வீழ்த்தியது உண்மை தான். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 58 ரன்களில் தோல்வியடைந்தது.
விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் தோனி 148 ரன்களை விளாசி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு தனது வருகையை அறிவித்தார். அந்தப் போட்டியில் நவீன் உல் ஹசன் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் மொத்தமாக அந்தத் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் நவீன் உல் ஹசன் வென்றது குறிப்பிடத்தக்கது.