இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை இழந்தது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக இருந்ததும் ஒரு காரணம். உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான அஸ்வினை அணியில் எடுக்காமல் மிகப்பெரிய தவறை செய்தது இந்திய அணி. அதற்கான பலனாக போட்டியைத் தோற்றது.
மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியின் முதுகெலும்பாக இருக்கும் ஜாஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காயம் காரணமாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகியுள்ளது. அவர் விரைவில் அணியில் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி கிட்டத்தட்ட ஒரு மாத ஓய்வுக்கு பின் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு தயாராகிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பவுலிங்கில் அச்சுறுத்தும் வகையிலான பவுலர்கள் யாரும் இல்லையென பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது ஷெஹ்சாத் கூறியுள்ளார்.
ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர் “இந்திய பவுலர்களை அவமரியாதை செய்வதற்காக நான் இதை சொல்லவில்லை. ஆனால், எதிரணி பேட்ஸ்மேன்கள் விளையாட பயப்படும் அளவுக்கான எந்த பந்து வீச்சாளரும் இந்தியாவில் இல்லை. பும்ரா, ஜடேஜா மற்றும் அஷ்வின் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்களும் ஆபத்தான பந்துவீச்சாளர் இல்லை. ஆனால் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் ஆபத்தானவர்கள்.” என்று கூறியுள்ளார்.
ஆபத்தான பந்துவீச்சாளர்கள் என்ற தலைப்பில் பேசிய ஷெஹ்சாத், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரை வலைப் பயிற்சிகளில் எதிர்கொண்டதை பற்றி பேசியுள்ளார். அவர் வலை பயிற்சியின் போது எப்படி சிறந்த பண்புகளோடு நடந்து கொள்வார் என்று பேசியுள்ளார்.
அக்தர் பற்றி “சோயப் அக்தரைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரையும் என்னால் அச்சுறுத்தும் பவுலராக சொல்ல முடியவில்லை. நான் அணிக்கு புதியவராக இருந்தபோது, அவர் ஏற்கனவே ஷோயப் அக்தர் என்ற பிம்பத்தை உருவாக்கி இருந்தார். அவருக்கு 2 சிறந்த குணங்கள் இருந்தன. முதலில், அவர் நெட்ஸில் நோ-பால் வீசமாட்டார். இரண்டாவதாக, அவர் நெட்ஸில் பேட்ஸ்மேன்களுக்கு தேவையில்லாத பவுன்சர்களை வீசியதில்லை. அப்படி வீசினால் பேட்டர் காயமடைவார் என்று அவருக்குத் தெரியும், ”என்று ஷெஹ்சாத் மேலும் கூறினார்.