சமூக வலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் தற்போது அதிகம் டிரெண்டிங்கில் இருந்து வரும் விஷயம் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோஹித் ஷர்மா தொடர்பான விஷயம் தான். ஐபிஎல் ஏலம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாள் முதல், கிரிக்கெட் அரங்கே சற்று பரபரப்பாக இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தமுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கிடையில், யாரும் எதிர்பாராத வகையில் மும்பை அணியில் இருந்து விலகிப் போன ஹர்திக் பாண்டியாவை அந்த அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மும்பை அணியில் ஆடி வந்த ஹர்திக், பின்னர் புதிதாக உதயமான குஜராத் அணியில் இணைந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஒரு ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா, அடுத்த ஐபிஎல் தொடரில் இறுதி போட்டி வரைக்கும் முன்னேறவும் உதவி இருந்தார். குஜராத் அணியின் சிறந்த கேப்டனாக இருந்தும் அவர் மீண்டும் மும்பை அணியில் இணைய விருப்பம் தெரிவிக்க, அதனை குஜராத்தும் ஏற்றுக் கொண்டது. மும்பை அணியில் மீண்டும் இணைந்துள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் என்ற உயர் பதவியும் கிடைத்துள்ளது.
இதுதான் தற்போது மும்பை மற்றும் ஐபிஎல் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மாவை விலக்கி விட்டு தற்போது ஹர்திக்கை கேப்டனாக நியமிப்பதில் என்ன அவசரம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஹர்திக்கை புதிய கேப்டனாக நியமித்ததற்கான விளக்கத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்ததும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ரசிகர்கள் இல்லை.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டதில் தவறில்லை என தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். “இந்த முடிவால் சிலர் மகிழ்ச்சி அடைவார்கள். சிலர் வேதனை அடைவார்கள். ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததால் லட்சக்கணக்கில் ஃபாலோவர்களை மும்பை அணி இழந்ததாக படித்தேன். இது மும்பை அணியின் தவறான முடிவாக எனக்கு படவில்லை.
ரோஹித் சிறந்த கேப்டனாக தான் மும்பை அணிக்கு செயல்பட்டிருந்தார். அதனால் வரும் நெருக்கடிகளை குறைத்து விட்டு பேட்டிங்கில் அதிகம் அதிரடியை வெளிப்படுத்தும் பொருட்டில் கூட அவர் விலகிக் கொள்ள இந்த முடிவை எடுத்திருக்கலாம். சூர்யகுமார் மற்றும் பும்ரா ஆகியோர் மும்பை அணிக்கு விசுவாசமாக இருந்தும் அணியில் இருந்து விலகி மீண்டும் இணைந்த ஹர்திக்கிற்கு கேப்டன் பதவியை கொடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆனால், ஒரு வீரர் அணியில் மீண்டும் இணைவதை அவருக்கான வாய்ப்பாக பாருங்கள். இதற்கு எதிர்மறை கருத்துக்கள் வருவதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. மற்ற வீரர்களுடன் இணைந்து ஹர்திக் மும்பை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தால் உங்களுக்கு நிச்சயம் எந்தவித பிரச்சனையும் இருக்காது” என ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.