ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் இந்திய அணியையும் வீரர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்திய அணி மோசமாக செயல்படுவதற்கு ஐபிஎல் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதும் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மே 29 அன்று ரிசர்வ் நாளில் விளையாடப்பட்டது, இதனால் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராக ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் கிடைத்தது. இது பற்றி பேசிய கேப்டன் ரோஹித் சர்மாவும், WTC இறுதிப் போட்டிக்குத் தயாராவதற்கு அணிக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி உலகளவில் மிக அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டியாக உள்ளது. வீரர்கள் ஒரு ஆண்டு சர்வதேச அணிக்காக விளையாட பெறும் தொகையை இரண்டு மாதத்தில் ஐபிஎல் மூலம் சம்பாதிக்கின்றனர்.
அதனால் பல வீரர்கள் தேசிய அணியை விட ஐபிஎல் போன்ற லீக்குகளில் விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தொடர்ச்சியாக குறுகிய இடைவெளியில் அதிக போட்டிகள் விளையாடுவதால் பல வீரர்கள் காயமடைந்து தேசிய அணிக்காக விளையாட முடியாத சூழல் உருவாகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் காயமடைந்த நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போகலாம் என்பதே அதற்கு சிறந்த உதாரணம். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி உலகக்கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: மகாராஷ்ட்ரியனா இருந்தாலும் சென்னை மக்களுக்காக தனது வாழ்வின் மிகப்பெரிய ஒரு பாரம்பரிய நிகழ்வை அர்ப்பணித்த ருதுராஜ் உட்கர்ஷா ஜோடி. ருதுராஜ் வெளியிட்ட சூப்பர் பதிவு
இது பற்றி பேசியுள்ள அவர் “உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் வெல்வது மிகவும் கடினம். ஐபிஎல் நீங்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும், பின்னர் ப்ளேஆஃப்களில் விளையாட வேண்டும். பின்னர் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். அதேசமயம் உலகக்கோப்பை போட்டியில் 4-5 போட்டிகளுக்குப் பிறகு அரையிறுதிக்கும் அதன் பின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.” என்று கூறியுள்ளார்.