தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீரும், இந்திய அணி வீரர் விராட் கோலியும் ஐபிஎல் தொடரில் சில முக்கியமான இடத்தில் மோதிக் கொண்டிருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு இருந்தது. இவர்கள் இருவருமே சற்று கடுமையாகவும் மோதிக் கொண்டதால் பல ஆண்டுகளாக இவர்களுக்கு இடையே சண்டை இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் இவை அனைத்திற்கும் கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் கம்பீர் இணைந்து முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் ஆடிய போது கம்பீர் மற்றும் கோலி ஆகியோர் மீண்டும் ஒருமுறை மோதிக் கொள்ளப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவை அனைத்தையும் உடைத்து நொறுக்கி இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, இது தொடர்பான புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். வெளியே சிரித்துக் கொள்வதைப் போல காமித்துக் கொண்டாலும் அணி என வரும் போது இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு கருத்து வேறுபாடு உருவாகும் என்று தான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் கம்பீர் பயிற்சியாளரான சமயத்தில் அதற்கு தனது முழு ஆதரவையும் கொடுப்பேன் என கோலி சம்மதம் சொன்னதாக பிசிசிஐ தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விராட் கோலி குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்து நிச்சயம் அவர்களுக்கு இடையே இனிமேல் எந்த சண்டையும் வராது என்பதற்கு சாட்சியாகவும் அமைந்துள்ளது.
“நானும் விராட் கோலியும் மிகச் சிறந்த ஒரு உறவை கிரிக்கெட்டுக்கு வெளியேயும் தொடர்ந்து வருகிறோம். எங்களை பற்றிய செய்திகள் ஊடகங்களுக்கு நன்றாக இருக்கும். எங்களுடைய உறவு என்பது பொதுவாக இருக்காது. அது எனக்கும், கோலிக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட விஷயங்களாகும்.
நானும் கோலியும் நிறைய மெசேஜில் உரையாடி உள்ளோம். நான் பயிற்சியாளர் ஆனதற்கு முன் அல்லது பின் என்ன விவாதித்தோம் என்பது முக்கியம் கிடையாது. கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். நிச்சயம் நாங்கள் சிறப்பாக சேர்ந்து அணியின் வெற்றிக்காக உழைப்போம் என நம்புகிறேன். அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் வேலை. நூறு கோடி மக்களை நாங்கள் பிரதிபலிப்பதால் ஒரே பக்கத்தில் நின்று பணிபுரிய வேண்டும்” என கம்பீர் கூறி உள்ளார்.