கிரிக்கெட் அரங்கில் இன்று நம்பர் ஒன் வீரராக இருக்கும் விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்து வைத்து 16 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை ஆட தொடங்கியதன் பின்னர் சர்வதேச போட்டியில் இதுவரை அவரது பல சாதனைகளை நெருங்க முடியாமல் தான் உள்ளது.
அதிக ரன்கள், அதிக சதம், அதிக அரைச் சதம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ள விராட் கோலி, அவரது ஃபிட்னஸ்க்காகவே இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும் விராட் கோலி பேட்டிங் செய்ய உள்ளே வந்து விட்டால் நிச்சயம் அவர்களுக்கு ஒருவித பதட்டமும் உருவாகிவிடும்.
தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்து வருவதுடன் மட்டுமில்லாமல் ரசிகர்கள் தொடங்கி பல கிரிக்கெட் பிரபலங்களின் ஃபேவரைட் வீரராகவும் விராட் கோலியின் பெயர்தான் உள்ளது. சர்வதேச அரங்கில் சச்சின் எப்படி ஒரு 20 ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கிரிக்கெட்டின் கடவுளாக வலம் வந்தாரோ, அதே போல அதற்கடுத்த தலைமுறை வீரர்களின் முக்கியமானவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் விராட் கோலியைப் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிக கவனம் பெற்று வருகிறது. கோலி தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய காலகட்டத்தில் கம்பீருடன் இணைந்து நிறைய போட்டிகள் ஆடியுள்ளார். அதிலும், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் அவர்கள் இருவரும் இணைந்து சேர்த்த பார்ட்னர்ஷிப் இந்திய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தது.
இதற்கு மத்தியில், விராட் கோலி 16 ஆண்டுகள் நிறைவு செய்த நேரத்தில் அவரை பற்றி பேசி இருந்த கவுதம் கம்பீர், “இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி வேகமாக முதல் போட்டியில் அவுட்டாகி நடையைக் கட்டி இருந்தார். ஆனால் வலைப் பயிற்சியில் அவர் பேட்டிங் செய்த விதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக விளையாட போகிறார் என்பதை எங்களுக்கு காண்பித்தது.
நல்ல திறமை கொண்டு விளங்கிய விராட் கோலிக்கு தன்னை நிரூபிப்பதற்கு கொஞ்சம் நேரம் மட்டுமே தேவைப்பட்டது. தனது அணிக்காக எப்படி போராடி வெற்றி பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். இந்திய அணியில் ஆட வந்த ஆரம்ப காலகட்டத்தில் எப்படி அணிக்காக வெற்றியை தேடிக் கொடுத்தார் என்பது மிகப்பெரிய பாசிட்டிவ்வான விஷயம்” என கம்பீர் கோலியை பாராட்டி உள்ளார்.