இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில் அவர் ஒருநாள் போட்டியின் ஆல் டைம் இந்திய அணியின் லெவனை தேர்வு செய்துள்ளது மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல வீரர்களும் தங்களுக்கு தோன்றும் நேரத்தில் ஆல் டைம் லெவன் எனப்படும் கனவு அணி வீரர்களை ஒரு அணியில் இருந்தோ அல்லது அனைத்து வடிவிலும் சேர்த்தோ தேர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்திருந்த போது ஏன் தோனியை இடம்பெறச் செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் இதற்கு பின்னர் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக், தோனி இடம்பெறாமல் போனது தன்னுடைய தவறு என்றும் உண்மையை விளக்கி இருந்தார்.
தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல் டைம் இந்திய அணியின் லெவனை தேர்வு செய்தது பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் கம்பீர் தேர்வு செய்துள்ள அணியில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போதைய கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மாவின் பெயரை ஒரு நாள் இந்திய அணிக்கான ஆல் டைம் லெவனில் சேர்க்காத கம்பீர், பும்ராவின் பெயரையும் இடம் பெற செய்யாமல் போனது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ரோஹித் ஷர்மாவின் தொடக்க வீரர்கள் இடத்தை சேவாக்கிற்கு கொடுத்துள்ள கம்பீர், அவரது பெயரையும் இணைத்து குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு முறையே டிராவிட் மற்றும் சச்சின் பெயரை தேர்வு செய்துள்ள கம்பீர், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் கோலி மற்றும் யுவராஜ் சிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் தோனியை தேர்வு செய்து அவரை கேப்டனாகவும் நியமித்த கம்பீர், சுழற்பந்து வீச்சாளர்களாக அணில் கும்ப்ளே மற்றும் அஸ்வின் ஆகியோரை இடம் பெற செய்துள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ராவின் பெயரை நிராகரித்த கம்பீர், இர்ஃபான் பதான் மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பும்ரா மற்றும் ரோஹித் ஷர்மா பெயரை இந்த கனவு லெவனில் நிராகரித்தது போல முன்னாள் ஜாம்பவான்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கரின் பெயரை கம்பீர் சேர்க்காமல் போனது பற்றியும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.