இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த பல ஆண்டுகள் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். இவரது பதவிக் காலத்தில் இந்திய அணி சிறந்து விளங்கி நம்பர் 1 அணி என்ற பெயரை எடுத்தாலும் உலக கோப்பையை மட்டும் ஏனோ சொந்தம் கொண்டாட முடியவில்லை. இந்திய அணியின் வீரராக நிறைய போட்டிகள் ஆடி கொடுத்துள்ள ராகுல் டிராவிட், அணியில் இருந்த போதும் எந்த உலக கோப்பையையும் வெல்ல முடியாமல் போயிருந்தது.
இதனிடையே, டி20 உலக கோப்பைத் தொடருடன் தனது பயிற்சியாளர் பதவிக் காலம் முடிவடைவதாக அதிகாரபூர்வமாக ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். இதனால், இந்திய அணி வீரர்களுக்காக என்பதை தாண்டி, எந்த உலக கோப்பையையும் தனது கிரிக்கெட் பயணத்தில் பார்க்காத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராகவாவது அதனை சொந்தமாக்கி விட வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது.
இதனை ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் செய்ய, 13 ஆண்டுகள் கழித்து ஒரு உலக கோப்பையையும் இந்திய அணி கண்டிருந்தது. எப்போதுமே சாந்தமாக அமைதி முகத்துடன் காணப்படும் ராகுல் டிராவிட், உலக கோப்பையை கையில் பெற்றுக் கொண்டதும் குழந்தை போல மிக உற்சாகமாக அந்த தருணத்தை கொண்டாடி தீர்த்திருந்தார்.
ஆனால், இன்னொரு பக்கம் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீங்கியது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருந்தது. அப்படி இருக்கையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பற்றி கம்பீர் உள்ளிட்ட பல முன்னாள் இந்திய வீரர்கள் பெயரும் அடிபட்டு வந்தது.
இந்த நிலையில் தான், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவலை போல, டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “கவுதம் கம்பீரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நவீன காலத்து கிரிக்கெட் வேகமாக மாறி வருவதற்கேற்ப அதனை மிக ஆழமாக கவனித்து வருகிறார் கம்பீர். தனது பயணத்திலும் நிறைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கம்பீர், இந்திய கிரிக்கெட்டை முன்னின்று வழிநடத்தவும் சிறந்த நபர் என நம்புகிறேன்.
இந்திய அணி குறித்து அவரது தெளிவான பார்வை, அவரது பரந்த அனுபவம் ஆகியவற்றுடன் இந்த இடத்திற்கு முழுமையாக முன்னிறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார். கவுதம் கம்பீரின் கிரிக்கெட் பார்வை மிக வித்தியாசமாக இருப்பதால் அதன் தாக்கம் இந்திய அணியிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.