17 வது ஐபிஎல் சீசன் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதே வேளையில், இந்த தொடர்களில் ஒவ்வொரு அணிகளுக்கும் சிறந்த வீரர்கள் என பலர் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பார்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்த போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆட தொடங்கிய கோலி, 17 சீசனிலும் அதே அணிக்காக மட்டும் விசுவாசமாக ஆடி வருகிறார்.
கோலியை போல சிஎஸ்கேவுக்காக நீண்ட காலங்கள் ஆடி வரும் தோனி, ஜடேஜா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட ஆண்டுகள் ஆடி வரும் ரோஹித் ஷர்மா என பலரது பெயரை சொல்லி கொண்டே போகலாம். இப்படி ஒரு ஐபிஎல் அணியின் தூண்களாக இருக்கும் போது அந்த அணியை நினைத்தாலே இந்த பிரபல வீரர்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர்களின் புகழும் நிறைந்திருக்கும்.
இதில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் எப்படியோ அவரை போலவே பும்ராவும் தனது ஐபிஎல் பயணம் ஆரம்பித்தது முதல் அதே அணிக்காக மட்டும் தான் ஆடி வருகிறார். மேலும் இவர்களை போல இளம் வயதில் மும்பை அணியில் ஒரே போட்டியில் ஆடி பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை சரியாக ஆரம்பித்த சூர்யகுமார் யாதவ், மீண்டும் மும்பை அணிக்காக மாற்றப்பட்டு இன்று வரையில் அவர்களின் மிடில் ஆர்டரில் அசைக்க முடியாத தூணாகவும் இருந்து வருகிறார்.
மேலும் இதன் காரணமாக, சர்வதேச போட்டிகளில் ஆட தொடங்கிய சூர்யகுமார், இன்று டி 20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலும் இருக்கிறார். இந்த சீசனில் மும்பை அணி வெளியேறினாலும் அவர்கள் வெற்றி பெற்ற ஒரு சில போட்டிகளில் சூர்யகுமாரின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் விஷயத்தில் தப்பாக முடிவு எடுத்து விட்டதாக கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்து அதிகம் வைரலாகி வருகிறது. “ஒரு கேப்டனுடைய ரோல் என்பது அணியில் அதிகம் திறமை இருக்கும் வீரரை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்பதுதான். இதில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஏழு ஆண்டுகள் இருந்தபோது நான் வருந்தும் ஒரே ஒரு விஷயம் எதுவென்றால் சூர்யகுமாரை சரியாக நாங்கள் பயன்படுத்தாததுதான்.
இதற்குக் காரணம் அணியில் இருந்த காம்பினேஷன். மூன்றாவது வீரராக ஒருவரை தான் ஆட வைக்க முடியும். ஒரு தலைவராக நீங்கள் மற்ற 10 வீரர்களை பற்றியும் யோசிக்க வேண்டும். சூர்யகுமார் ஏழாவது வீரராக இறங்கி எங்களுக்காக ஆடி வந்தாலும் அதைவிட மூன்றாவது வீரராக அபாயகரமான பேட்ஸ்மேனாக இருந்தார் என்பது தான் உண்மை.
சூர்யகுமார் ஒரு அணிக்கான வீரர் ஆவார். அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் ஒருவேளை வாய்ப்பில்லாமல் வெளியே உட்கார்ந்திருந்தாலும் அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் தனது பங்களிப்பை அளிப்பதற்கு ஆர்வமாக தான் இருப்பார்” என கம்பீர் கூறினார்.