உலக அளவில் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. சினிமா ஹீரோக்களை பார்ப்பது போன்று இந்தியாவில் ரசிகர்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பிரபலம். ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் அவர்கள் மீது உண்மையான அன்பையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கின்றனர்.
கடந்த 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியதிலிருந்து இதுவரை இந்திய கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட்டையே ஆட்சி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த தற்போது வரை 16 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது உலக அளவில் மிகப்பெரிய இலாபத்தை ஈட்டும் கிரிக்கெட் தொடராகவும் திகழ்ந்து வருகிறது. இந்த தொடர்களில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
அப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ள சில கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களிலும் நடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் வீரர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் சேவாக் போன்றோர் சமீபத்தில் புகையிலை நிறுவனத்தின் ஒரு பொருளை வாயில் உண்பது போன்ற விளம்பரத்தில் நடித்திருந்தனர். அவர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் வேளையில் அவர்களைப் பின்பற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவ்வாறு அவர்கள் பணத்திற்காக புகையிலை ஊக்கப்படுத்தும் விளம்பரத்தில் நடிப்பது அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே ரசிகர்கள் சிலர் ஆதங்கப்பட்டு வந்த வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தற்போது புகையிலை பயன்படுத்தும் விளம்பரங்களில் நடித்த வீரர்களுக்கு எதிராக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
இது போன்ற விளம்பரங்களில் பிரபலங்களாகிய நீங்கள் நடிப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில் நீங்கள் உங்களுடைய பெயருக்காக இந்த புகழை பெறவில்லை. கடினமாக உழைத்து இந்த புகழை பெற்று உள்ளீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புகையிலை பொருட்கள் விளம்பரத்தினால் கிடைக்கும் பணம் முக்கியம் அல்ல. இதனை பார்த்து ரசிகர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது.
உங்களை பின்தொடரும் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கருக்கு இது போன்ற விளம்பரத்தில் நடிக்க 20-30 கோடி ரூபாய் கொடுத்து அந்த விளம்பரத்தில் நடிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதை மறுத்துவிட்டார். அவரைப் போன்றே நீங்களும் ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.