இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களாக யார் வேண்டுமென தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. விளையாட்டை பொறுத்தவரையில் எந்த அணியாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக திகழ்வதற்கு பயிற்சியாளர்கள் பங்கு மிக மிகப் பெரிது.
அந்த வகையில், இந்திய அணியையும் கேரி க்ரிஸ்டன், ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சியாளர்களாக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளனர். இதில் சில முக்கியமான ஐசிசி கோப்பை, சில முக்கியமான வெற்றிகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இவர்களின் பயிற்சி காலங்களில் நிறைந்திருந்தது.
அப்படி ஒரு சூழலில் டி20 உலக கோப்பைத் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிந்து விலக அவருக்கு பதிலாக தற்போது கவுதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிசிசிஐ தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், கவுதம் கம்பீரும் நாட்டுக்காக பயிற்சியாளராக வழி நடத்துவதே தனது மிகப்பெரிய பெருமை மற்றும் பாக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பீரின் வருகையால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு முக்கிய ஐசிசி தொடர்களில் மிகப்பெரிய தாக்கத்தை இந்திய அணி ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது. ஐபிஎல் தொடரில் ஆலோசகராக கலக்கிய அவரது திறன் அனைத்துமே நிச்சயம் இந்திய அணியிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம். மேலும் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் மூன்று அணியை தயார் செய்வதே தன்னுடைய நோக்கம் என கம்பீரும் முன்பு பிசிசிஐயிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் களமிறங்க உள்ள சூழலில் அவரது வியூகங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றியும் எந்தெந்த வீரர்களை அணியில் சேர்ப்பார் என்பது பற்றியும் அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக யார் வேண்டும் என்பது பற்றி தனது விருப்பத்தையும் கம்பீர் தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. கொல்கத்தா அணிக்கு மட்டும் இல்லாமல் பல இந்திய இளம் வீரர்கள் சாதிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமாரை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும் என்றும் பிசிசிஐயிடம் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
யாரும் எதிர்பாராத இரண்டு பெயர்களை கவுதம் கம்பீர் விருப்பமாக தெரிவித்துள்ளதால் நிச்சயம் அவரது திட்டம் பெரிய விஷயமாக இருக்கும் என்றே தெரிகிறது.