கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே எப்போதும் சில வீரர்களுக்கு மத்தியில் ஏதாவது சண்டையோ, வாக்குவாதமோ நடைபெறுவதை நாம் நிறைய போட்டிகளில் கவனித்திருப்போம். அப்படி இருக்கையில் சமீபத்தில் இதுபோன்று நடந்த சம்பவமும், அதன் பின்னால் முன்னாள் வீரர் ஒருவர் கூறிய வார்த்தை தொடர்பான செய்தியும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அரை இறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மணிபால் டைகர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், இந்தியா கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட ஆறு அணிகள் இந்த தொடரை ஆடி வருகிறது. இந்த அணிகள் அனைத்திலும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர், ஸ்ரீசாத், டுவைன் ஸ்மித், கப்தில், ராஸ் டெய்லர், மோர்னே மோர்கல், ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங் என பலரும் இந்த தொடரில் அடக்கம்.
இந்த நிலையில் தான் ஸ்ரீசாந்த் மற்றும் கம்பீர் ஆகிய இரு வீரர்களுக்கு இடையே ஒரு பெரும் வாக்குவாதமே நடந்துள்ளது. லெஜெண்ட்ஸ் லீக் தொடரில், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் இந்தியா கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதி இருந்தது. இதில், கம்பீர் பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவரை பார்த்து ஸ்ரீசாந்த் முறைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த கம்பீர், அவரது ஓவரில் சிக்சர், பவுண்டரிகளை விளாச, அடுத்த சில ஓவர்களுக்கு பின்னால் கம்பீர் ஏதோ ஸ்ரீசாந்தை பார்த்து சொல்ல அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் அவர்களுக்கு இடையே உருவான வாக்குவாதத்தை நிறுத்த முயற்சி செய்தனர். இந்த நிலையில், கம்பீர் தன்னை பார்த்து மேட்ச் பிக்சிங் செய்பவர் என்று கூறியதுடன் தகாத ஆங்கில வார்தையை பயன்படுத்தியதாக ஸ்ரீசாந்த் உண்மையை உடைத்து இன்னும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இந்தியாவுக்காக கம்பீர் ஆடும் போது கூட மற்றவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், ஜெயில் மற்றும் கிரிக்கெட் தடை என பல துன்பங்களை அனுபவித்தார். அதை குறிப்பிட்டு தான் கம்பீர் அப்படி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில் கவுதம் கம்பீர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக மறைமுகமாக தனது கருத்தையும் வெளியிட்டுள்ளார். அதாவது ‘விளம்பரத்திற்காக சிலர் செயல்படும் போது சிரித்துக் கொள்ள வேண்டும்’ என்பதை தனது பதிவில் ஸ்ரீசாந்தை நோக்கி அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
தலைசிறந்த இரண்டு முன்னாள் வீரர்கள் இந்த மாதிரி போட்டிக்கு நடுவே மோதிக்கொண்ட சம்பவமும் அதில் தகாத வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்ட விஷயமும் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.