இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரில் அதிக அளவில் கேட்கப்படும் கேள்வி யாதெனில் எம்.எஸ் தோனி இந்த சீசனில் ஓய்வு பெறுவாரா? என்பது மட்டும்தான். ஏனெனில் 41 வயதான தோனி சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய பின்னரே அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
அதன் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தை தாண்டியும், இந்தியாவில் எந்த ஒரு மைதானத்தில் சிஎஸ்கே அணியின் போட்டி நடைபெற்றாலும் தோனியை மைதானத்தில் நேரில் காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதுமே தோனிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பலம் காணப்படுகிறது. அதோடு தோனியும் சென்னை அணிக்கு ஒரு கோப்பையை வென்று கொடுத்துவிட்டு மேலும் ஒரு ஆண்டு விளையாடுவார் என ரெய்னாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தோனி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் துவங்கப்பட்ட டி20 லீக் தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் (மென்ட்டர் )ஒரு பகுதியாக இருப்பார் என்ற வதந்திகளும் இருந்து வந்தது. ஆனால் பி.சி.சி.ஐ உடன் இருக்கும் ஒப்பந்தம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் இடம் வகிக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு லீக் தொடரில் ஒரு பதிவியில் இருக்க வேண்டுமெனில் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் முடித்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். எனவே அவரால் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் எந்தவிதத்திலும் இடம்பெற முடியாது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் தோனி மென்ட்டராக பங்கேற்பாரா? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கிரீம் ஸ்மித் தனது கருத்தினை பதிலாக அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து விட்டார். ஒருவேளை ஐபிஎல் தொடரிலும் அவர் ஓய்வு பெற்றால் நிச்சயம் லெஜென்ட்ஸ் லீக் தொடரில் அவரால் விளையாட முடியும். அப்படி அவர் அந்த தொடரில் விளையாடினால் நிச்சயம் அவரை தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் இணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்வேன்.
அவரை போன்ற ஒரு வீரர் எங்களது லீக்கில் இணைந்தால் அந்த தொடருக்கு நிறைய மதிப்பைச் சேர்ப்பார். தோனிக்கு இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் பலம் உள்ளது. அதேபோன்று தென்னாபிரிக்காவிலும் அவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. இவ்வளவு பெரிய வீரர் எங்கள் நாட்டு டி20 லீக்கில் ஒரு பகுதியாக இருந்தால் நிச்சயம் அது எங்களது லீக்கிற்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கும் என கிரீம் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.