தோனிக்கான ரசிகர்கள் கோடிக்கணக்கில் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தாலும் ஒரு சிலர் அவரைப் பற்றி ஏதாவது பரபரப்பான கருத்துக்களை பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளதுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை பெற உதவியிருந்த கேப்டன் தோனி, கிரிக்கெட் அரங்கு கண்ட மிக முக்கியமான தலைமை பண்பை கொண்ட ஒருவராகவும் இருந்து வருகிறார்.
தோனியின் திறன் பல ரசிகர்களை கவர்ந்திழுத்தாலும் இன்னொரு புறம் அவரிடம் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக பலரும் குறிப்பிடுவார்கள். இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்ட சமயத்தில் சேவாக், கம்பீர் உள்ளிட்ட வீரர்கள் அணியிலிருந்து வெளியே வருவதற்கும் அவர்தான் காரணம் என பரபரப்பான குற்றச்சாட்டு இருந்து வந்தது.
அதே போல, யுவராஜ் சிங் தந்தையான யோகராஜ் சிங் கூட தோனி பற்றி ஏதாவது சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுவார். அப்படி ஒரு சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங், தோனி பற்றி தற்போது தெரிவித்துள்ள கருத்து ஒன்று ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனியுடன் தற்போது தொடர்பில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன்சிங், “நான் தோனியிடம் பேசுவதே கிடையாது. சிஎஸ்கே அணிக்காக ஆடிய போது தான் நாங்கள் பேசிக் கொண்டோம். அதன் பின்னர் நாங்கள் பேசுவதில்லை. நானும் தோனியும் பேசி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனக்கு எந்த காரணமும் இல்லை. ஒரு வேளை அவருக்கு இருக்கலாம். அந்த காரணங்கள் என்ன என்பதும் எனக்கு தெரியவில்லை.
நான் ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து சிஎஸ்கே அணியில் ஆடிய போது தான் பேசிக் கொண்டோம். அதுவும் மைதானத்திற்குள் தான் பேசிக் கொண்டோம். அதன் பின்னர் அவர் எனது அறைக்கு கூட வருவதில்லை. நானும் அவரது அறைக்கு போகமாட்டேன். தோனிக்கு எதிராக எனக்கு எந்த கோபமும் இல்லை. அப்படி அவருக்கு எதுவும் என்னிடம் இருந்தால் அதை என்னிடம் சொல்லி இருக்கலாம்.
அப்படி இருந்திருந்தால் தோனி எப்போதோ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் அவரை அழைத்து பேசவும் முயற்சித்தது கிடையாது. எனக்கென்று சில விஷயங்கள் உள்ளது. எனது அழைப்பை எடுப்பவர்களிடம் மட்டும் தான் நான் அழைத்து பேசுவேன். மற்றபடி இருப்பவர்களிடம் பேச எனக்கு நேரம் கிடையாது.
நான் நண்பர்களாக இருப்பவர்களிடம் மட்டும் தான் தொடர்பில் இருந்து வருகிறேன். உறவு என்பது எப்போதும் கொடுத்து வாங்குவது தான். நீங்கள் என்னை மதித்தால் நானும் உங்களை மதிப்பேன். ஆனால் நான் ஒரு சில முறை அழைத்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் குறைந்த சமயத்தில் மட்டும் தான் உங்களை சந்திப்பேன்” என தோனியுடனான உறவு பற்றி பல பரபரப்பான கருத்துகளையும் ஹர்பாஜன் சிங் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.