இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் அணில் கும்ப்ளே என்ற சிறந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தில் ஹர்பஜன் சிங் சில காலங்கள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் சிறப்பான சுழற்பந்து வீச்சுத் திறனை வெளிப்படுத்தி வந்தார். கிரிக்கெட் போட்டிகள் என எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு காலம் வரும்போது சிறந்த வீரர்களாக ஜொலிக்கும் ஒருவரை முந்தும் ஒரு வீரர் நிச்சயம் உருவாகிக் கொண்டு தான் இருக்கப் போகிறார்.
அந்த வகையில் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் ஆகிய இருவரையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளரும் இந்திய அணிக்கு கிடைத்திருந்தார். ஐபிஎல் தொடரில் ஜொலித்ததன் மூலம் இந்திய அணியிலும் இடம்பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்டில் சிறந்த பந்து வீச்சாளராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். 537 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ள அஸ்வின், வார்னே, முரளிதரன் ஆகியோருக்கு நிகராக பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு நடுவே திடீரென ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஹர்பஜன் சிங்கும் அவரை பாராட்டி சில கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். ஆனால், அஸ்வினை பற்றி பல முறை மறைமுகமாக ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளதாகவும், அவரது இடத்தை அஸ்வின் பிடித்து விட்டதால் அந்த கோபம் மனதில் இருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டனர்.
இதனை கவனித்த ஹர்பஜன் சிங், தன் மீதான விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். “என்னால் முடிந்த அளவுக்கு தான் சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களை நான் படிப்பேன். எனக்கும் அஸ்வினுக்கும் இடையே ஏதாவது சண்டையோ அல்லது கருத்து வேறுபாடோ அல்லது சச்சரவோ இருந்திருந்தால் நான் தான் அவரிடம் சென்று என்ன பிரச்சனை என கேட்டிருப்பேன்.
ஆனால் அப்படி எதுவுமே இல்லை. அவரது அஸ்வினின் விதிப்படி அவருக்கு என்ன கிடைக்கிறதோ அது கிடைக்கும் அதே போல என்னுடைய விதிக்கு என்ன கிடைக்குமோ அது கிடைக்கும். இந்தியா கண்ட அபாரமான பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் அஸ்வின். அவரது சாதனையை எண்ணி நானும் அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் பலரும் ட்விட்டரில் ஏதாவது கருத்தை தெரிவித்து எனக்கும் அஸ்வினுக்கும் பிரச்சனை இருப்பது போல் சித்தரித்தால் அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து தான். இந்தியாவில் உள்ள பிட்ச்களில் அதிகம் ஸ்பின் இருப்பதால், இங்கே போட்டிகள் இரண்டு அரை நாட்களில் முடிந்து விடுகிறது என்று தான் குறிப்பிட்டிருந்தேன். அதை தான் ரசிகர்கள் எனக்கும் அஸ்வினுக்கு சண்டை என திரித்து எழுதி விடுகிறார்கள்” என ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.