இந்தியாவிற்கு தோனி போல் ஒரு கேப்டன் இனி கிடைக்க முடியுமா என்று அனைவருமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு சமமாக உருவான கேப்டன் தான் ரோஹித் ஷர்மா. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில சீசன்களில் சிஎஸ்கே அணி அசைத்து பார்க்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருந்தது.
தோனி தலைமையில் இரண்டு கோப்பைகளை அடுத்துடுத்து வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வருங்காலத்திலும் நிறைய ஐபிஎல் கோப்பைகளை வென்று யாரும் நெருங்க முடியாத அளவிற்கு உயரம் தொடும் என்றும் அனைவரும் கருதினர்.
ஆனால் 2013 முதல் 8 ஆண்டுகள் ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று வரலாறு படைத்திருந்தது. இப்படி ஐபிஎல் தொடரில் தோனிக்கு நிகரான கேப்டனாக விளங்கிய ரோஹித் ஷர்மா, சமீப காலமாக இந்திய அணியையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் நடந்த மூன்று ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி முன்னேறியதற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா தான்.
அதில் இந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்திருந்தது இந்திய அணி. தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்றுள்ள ரோஹித் ஷர்மா, அடுத்த ஆண்டு நடைபெறும் 2 ஐசிசி தொடர்களிலும் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கையில் தோனி மற்றும் ரோஹித் ஆகிய இரண்டு பேருடன் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச அணியிலும் சேர்ந்து ஆடியுள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “தோனி மற்றும் ரோஹித் ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
தோனி எப்போதும் ஒரு பந்து வீச்சாளரிடம் சென்று உனக்கு எப்படிப்பட்ட ஃபீல்டிங் வேண்டும் என்று கேட்கமாட்டார். ஒவ்வொரு பந்திலும் அவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார். உதாரணத்திற்கு சென்னை அணியில் ஒரு முறை ஷர்துல் தாக்கூர் வீசிய இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இருந்தார் கேன் வில்லியம்சன்.
அப்போது ஃபீல்டிங் நின்ற நான், தோனியிடம் ஏதேனும் வித்தியாசமாக முயற்சி செய்ய ஷர்துலிடம் கூறுங்கள் என்றேன். ஆனால் அவர் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றும் ஷர்துல் தாக்கூராக தனது பந்து வீச்சில் இருக்கும் தவறுகளை தெரிந்து கொண்டால் தான் அவராக அதில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினார். அதுதான் தோனி ஸ்டைல்.
ஆனால் ரோஹித் ஷர்மா அப்படியே முற்றிலும் மாறுபட்ட கேப்டன். ஒவ்வொரு வீரர்களுடனும் பேசி கொண்டிருக்கும் அவர், வீரரின் தோள் மேல் கை போட்டு உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுப்பார்” என ஹர்பஜன் சிங் கூறி உள்ளார்.