தற்போது இந்திய அணியை கடந்த சில ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா வழிநடத்தி வரும் நிலையில் அவர் சிறப்பாக செயல்பட தொடங்கியது முதல் மிகப்பெரிய ஒரு ஒப்பீடு நடந்து கொண்டே இருக்கிறது. கங்குலி, ராகுல் டிராவிட் வரிசையில் இளம் வீரர் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அவர் மீது எதிர்பார்ப்பு தாண்டி அவர் சிறப்பாக அணியை வழிநடத்துவாரா என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது.
ஆனால், முதல் கேப்டன்சி வாய்ப்பையே டி20 உலக கோப்பையாக மாற்றி கொடுத்திருந்த தோனி, மிக வேகமாக சிறந்த கேப்டன் என்ற பெயரையும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எடுத்திருந்தார். இவரை தொடர்ந்து கோலி, ரோஹித் ஆகியோரும் இந்திய அணியை தலைமை தாங்கி வருகின்றனர்.
இந்திய அணியை ரோஹித் தலைமை தாங்க தொடங்கிய சமயத்தில், தோனிக்கு நிகரானவர் என யாரும் பாராட்டவில்லை. ஆனால் அதே வேளையில் கடந்த ஒரு வருடத்தில் அவர் கேப்டன்சியில் ஏற்படுத்திய தாக்கம் தோனியை மிஞ்சிவிட்டார் என பலரது பாராட்டுக்களையும் பெற காரணமாக இருந்தது. இதற்கு காரணம் மூன்று ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இந்திய அணியை இறுதி போட்டிக்கு கொண்டு சென்றது தான்.
இதனால் தோனியை விட ஒரு படி மேலே ரோஹித் இருக்கிறார் என பலரும் குறிப்பிட்டு வந்ததுடன் மட்டுமில்லாமல் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுடனும் மிகச் சிறப்பாக உரையாடி அவர்களின் திறனை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்குகிறார் என்றும் குறிப்பிட்டனர். அது மட்டுமல்லாமல் ரோஹித் கேப்டன்சியில் இன்னொரு சிறப்பம்சமாக மற்ற வீரர்களை முன்னிறுத்தி ஆடுவதை விட தானே முன்நின்று அணியை நடத்துவது தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோஹித் மற்றும் தோனி ஆகியோரின் கேப்டன்சி குறித்து ஹர்பஜன் சிங் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ரோஹித் தான் தோனியை விட முன்னில் இருப்பதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் ரோஹித் வீரர்களின் கேப்டன். அவர் வீரர்களிடம் சென்று அவர்களின் திட்டம் என்ன என்பது பற்றி உரையாடுவார். அணியில் இருக்கும் சக வீரர்களும் ரோஹித்துடன் எளிதாக கலந்துரையாட முடியும். ஆனால், தோனி அதற்கு நேர்மாறானவர்.
தோனி யாருடனும் பேசமாட்டார். தோனி அணியில் இருக்கும் வீரர்களுடன் தனது மௌனம் மூலம் தான் உரையாடுவார். அவர் தனது வீரர்களிடம் உரையாடும் ஸ்டைல் அது தான். அதே போல தோனி தனது பந்து வீச்சாளர்களிடம் எப்படி ஃபீல்டிங் செட் செய்ய வேண்டும் என்பதை கேட்கமாட்டார். அவர்களாக தங்களின் தவறுகளை உணர்ந்து செயல்பட வேண்டுமென நினைப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பும் ஒருமுறை தோனி மற்றும் ரோஹித் கேப்டன்சி வேறுபாடு குறித்து பேசிய போது, இதே போல சில கருத்துக்களை ஹர்பஜன் சிங் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.