கடந்த சில தினங்களாகவே இந்திய கிரிக்கெட் அணியை சுற்றி தான் நிறைய தலைப்பு செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் எப்போது நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் இப்போது வரை ஏராளமான பிரச்சனைகள் தான் இந்திய அணியை சுற்றி உருவாகி வருகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.
அடுத்ததாக நடைபெற உள்ள இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கவுதம் கம்பீர் தான் பயிற்சியாளராக வழி நடத்த உள்ளார். மேலும் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான சில முடிவுகளும் அரங்கேறி இருந்தது. ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா இருந்தும் ரியான் பராக், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது தொடங்கி பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டு தொடரிலும் துணை கேப்டனாக கில் தேர்வு செய்யப்பட்டதும் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. சீனியர் வீரர்கள் பலர் இருந்தும் கில்லுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிசிசிஐ-யை சரமாரியாக ரசிகர்கள் தாக்கி வருகின்றனர். இன்னும் இதில் மற்றொரு அதிர்ச்சியாக, டி20 உலக கோப்பைத் தொடரில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மாற்றி விட்டு புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளனர்.
இதற்கான காரணமும் தெரியாமல் இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் தடுமாறுவதால் தான் இந்த முடிவை எடுத்திருந்ததாகவும், ஆல் ரவுண்டருக்கு கேப்டன் பதவி கிடைத்தால் இன்னும் கடினமான இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஆல்ரவுண்டர்கள் பலரும் கேப்டனாக இருந்துள்ள நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்தது அநீதி என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில் தான் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் சில அதிருப்தியின் பெயரில் தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து மாற்றி உள்ளதாக அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.
குஜராத் அணியை இரண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக வழி நடத்தி இருந்த ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தியது பலருக்கும் பிடிக்கவில்லை. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்ததுடன் அவரது கேப்டன்சியும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றது. இதனை கவனித்த அஜித் அகர்கர், அதிருப்தியுடன் கேப்டன் பதவியை அவரிடம் இருந்து பறித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஹர்திக் பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவ் டிரெஸ்ஸிங் ரூமில் இன்னும் அதிக ஈடுபாடுடன் இருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என்றும் தெரிகிறது. ஒரே ஒரு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சரியாக போகாததன் பெயரில் இந்த முடிவை பிசிசிஐ நிர்வாகத்தினர் எடுத்ததாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுவும் நியாயமானது இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.