வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு பேட்ஸ்மேன்களின் சொதப்பல் காரணமாக இருந்தது.
ஆனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முழுக்க முழுக்க ஹர்திக் பாண்டியாவே காரணமாக அமைந்திருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது, இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது, சஞ்சு சாம்சனை 5வது இடத்தில் களமிறக்கியது உள்ளிட்ட தவறுகளை பேட்டிங்கின் போது செய்தார்.
அதேபோல் அக்சர் படேலுக்கு பவுலிங் கொடுக்காதது, 20 ஓவரை வீச வைப்பதற்காக சாஹலை அட்டாக்கில் இருந்து நீக்கியது, பிட்சில் பவுன்ஸ் மட்டும் இருக்கிறது என்பது தெரிந்தும் கடைசி நேரத்தில் தான் வராமல் அர்ஷ்தீப் சிங்கிடம் பந்தை கொடுத்தது என்று பட்டியல் போடும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் தவறுகளை செய்துள்ளார்.
இந்த நிலையில் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு ஹர்திக் பாண்டியாவை சாஹல் புகழ்ந்து தள்ளியுள்ளது ரசிகர்களிடையே கோபத்தை அதிகரித்துள்ளது. சாஹல் பேசும் போது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைல் எம்எஸ் தோனியை போல் உள்ளது. தோனி பவுலர்களுக்கு அதிக சுதந்திரம் அளிப்பார். அதே அளவிற்கு சுதந்திரத்தையும், நம்பிக்கையும் ஹர்திக் பாண்டியாவும் அளிக்கிறார்.
இதுவரை 4 கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன். அவர்களை இப்படி சொல்லலாம். ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பியை போல் தான் 4 கேப்டன்களும். அவர்களில் மூத்த அண்ணன் தோனி, இரண்டாவது மற்றும் 3வது சகோதரர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. கடைசிக்குட்டி சிங்கமாக ஹர்திக் பாண்டியா.
இவர்கள் நான்கு பேரும் ஒரே அலைவரிசையில் இயங்கும் வீரர்கள் தான். யாரிடமும் பெரிய மாற்றங்கள் இல்லை என்று கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா கேப்டன்சியை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வரும் சூழலில், இப்படியான கருத்தை அவர் பேசியிருப்பது ஹர்திக் பாண்டியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.